தமிழகத்தில் விரைவில் அரிசி விலை உயரும் என்று தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு சந்தை நிலவர கணிப்பு மையம் இயங்கிவருகிறது. இது பல்வேறு விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, சந்தை நிலவரத்தை கண்காணித்து விலை உயருமா, குறையுமா என்ற கணிப்பை வெளியிடுகிறது.
இது நேற்று வெளியிட்டுள்ள கணிப்பில் தமிழகத்தில் விரைவில் அரிசி விலை உயரும் என்று அறிவித்துள்ளது.
இது வெளியிட்டுள்ள அறிக்கையில், பணவீக்கம் 8.24 விழுக்காடு அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நெல் மற்றும் அரிசியின் விலை நிலவரத்தை கண்காணித்து, அடுத்த நான்கு மாதங்களில் அரிசி விலை எவ்வாறு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நெல்லின் ஈரப்பதம் (11-12 விழுக்காடு), நெல்லின் அளவு-பருமன், உடைந்த அரிசி, கருப்பு பதர் உள்ள அரிசியின் அளவு ஆகிய நான்கு அளவு கோள்களின் அடிப்படையில் நெல் அல்லது அரிசி விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆந்திராவில் ரேஷன் கடைகளில் 1 கிலோ அரிசி ரூ.2 க்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதனால் அந்த மாநில அரசு அதிக அளவு நெல் கொள்முதல் செய்யும். இது தமிழகத்திற்கு, ஆந்திராவில் இருந்து வரும் அரிசி, நெல் வரத்தை பாதிக்கும்.
இதனால் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் (75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை) மூன்றாம் தர அரிசியின் விலை ரூ.100ம், நடுத்தர ரக அரிசியின் விலை ரூ.150ம், சன்னரக அரிசியின் விலை ரூ.200 அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கருதுகின்றனர்.
விவசாயிகள் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் எல்லா ரக நெல்லின் விலையும் குவிண்டாலுக்கு ரூ.150 முதல ரூ.200 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லின் தேவை அதிகரிப்பதால் இதன் விலை மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வலை உயரும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்த வருடம் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் உலக சந்தையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அரிசி விலை அதிகரிக்காது.
இந்த சூழ்நிலைகளில் நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரையும், அரிசி விலை குவிண்டாலுக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை விலை அதிகரிக்கும். இந்த விலை உயர்வு செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
குறுவை பருவத்தில் அறுவடை செய்த நெல், சந்தைக்கு வரும் போது விலை சிறிது குறையும் என்று விவசாய பல்கலைக் கழகத்தின் டாக்டர் என். ரவிந்திரன் தலைமையிலான குழு கணித்துள்ளது.
இந்த குழு நெல், அரிசி விலை அதிகளவு உயராமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் மார்க்கெட்டிங் சொசைட்டிகளுக்கு சொந்தமான கிடங்கிகளை (கிராமப்புறங்களில் உள்ளவை உட்பட) மொத்த நெல், அரிசி வியாபாரிகள்,. அரிசி ஆலைகள் பயன்படுத்தி கொள்ளவும், இருப்பு வைத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்.
பயிர் செய்வதற்கான செலவு அதிகரிப்பதும், நெல் விலை உயர்வதற்கு காரணம். இந்த செலவை குறைக்க ஒழுங்கு முறையில் பயிர் செய்ய வேண்டும்.
அரிசி ஆலைகளிடம் இருந்து நேரடியாக சில்லரை வியாபாரிகள் அரிசி கொள்முதல் செய்து விற்பனை செய்தால், நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என்று கூறியுள்ளது.