கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல் போன்றவைகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களால் துவக்கப்படும் புதிய பெட்ரோல் சுத்திகரிக்கரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால் எஸ்ஸார் ஆயில் போன்ற தனியார் பெட்ரோல் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடைக்காது.
நிதி அமைச்சகத்தின் விதி முறையின் படி, பொதுத்துறை நிறுவனங்களால் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் செயல்பட துவங்கும் பொதுத்துறை பெட்ரோல் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச் சலுகை பொருந்தும்.
தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களின் மொத்த பங்கு முதலீட்டில், பொதுத்துறை நிறுவனங்கள் வசம் 49 விழுக்காடு பங்கு இருந்தால், அந்த தனியார் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் வரிச் சலுகை வழங்கப்படும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரதீப் என்ற இடத்தில் தொடங்க இருக்கும் சுத்திகரிப்பு நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும்-மிட்டல் நிறுவனமும் கூட்டு சேர்ந்து துவக்க உள்ள பதிந்தா சுத்திகரிப்பு நிலையம், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் பினா என்ற இடத்தில் துவக்க உள்ள சுத்திகரிப்பு நிலையம் உட்பட எட்டு பெட்ரோல் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை பொருந்தும்.
இத்துடன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் குஜராத் மாநிலத்தில் காந்தி நகரிலும், ஆந்திராவில் தடிபகா என்ற இடத்தில் தொடங்கும் பெட்ரோல் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் வரிச் சலுகை பொருந்தும்.
மங்களூர் சுத்திகரிப்பு நிறுவனம் விரிவாக்கம் செய்யும் மூன்றாம் கட்ட சுத்திகரிப்பு நிலையம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான விசாக் சுத்திகரிப்பு நிறுவனத்தின் விரிவாக்கம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பானிபட் விரிவாக்கத்திற்கும் வரிச் சலுகை பொருந்தும்.
இந்த சலுகையின் படி, இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏழு வருடங்களுக்கு வருமான வரி கட்ட தேவையில்லை. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மே மாதம் 31ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
மத்திய நிதி அமைச்சகத்தின் விதிமுறைகளால், எஸ்ஸார் ஆயில் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் வடினார் என்ற இடத்திலும், நாகர்ஜூனா ஆயில் தமிழ்நாட்டில் கடலூரிலும், மேற்கு வங்கத்தில் ஹால்டியாவில் துவக்க உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை கிடைக்காது.