கடந்த 45 மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 8.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு அதிகாரபூர்வமாக இன்று வெளியிட்ட புள்ளி விவரப்படி, மே 17ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 8.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது சென்ற வாரத்தை விட 0.19 விழுக்காடு அதிகம்.
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 7.82 விழுக்காடாக இருந்தது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.3% ஆக இருந்தது.
மே 17ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் அதிகரித்ததற்கு காரணம், பழம், காய்கறி, பருப்பு வகைகளின் விலை அதிகரித்து இருந்ததே. அத்துடன் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் சில வகை எரி பொருட்களின் விலையும் உயர்ந்து இருந்தது.
இந்த வாரத்தில் மொத்த விலை குறியீட்டு எண் அளவுப்படி, கடல் சார் உணவு வகைகளின் விலை 6%, பழம் மற்றும் காய்கறி விலை 3%, பயத்தம் பருப்பு விலை 2%, மசாலா பொருட்களின் விலை 1% அதிகரித்து இருந்தது.
அதே போல் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் எரி எண்ணெய் விலை 3%, டீசல் விலை 2%, உலை கரி விலை 31% உயர்ந்து இருந்தது.
மத்திய அரசு உள்நாட்டில் விலை உயராமல் இருப்பதற்காக கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. எனினும் இதன் விலை 7% உயர்ந்து இருந்தது. இதே போல் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விலை 1%, நாட்டு சர்க்கரை விலை 1% அதிகரித்து இருந்தது.
அதே நேரத்தில் சிமென்ட் விலை 0.6%, இரும்பு மற்றும் உருக்கு பொருட்களின் விலை 0.6% குறைந்து இருந்தது.