Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்ணெய் நிறுவன இழப்பை ஈடுகட்ட மேல்வரி / மிகைவரி விதிக்கத் திட்டம்?

எண்ணெய் நிறுவன இழப்பை ஈடுகட்ட மேல்வரி / மிகைவரி விதிக்கத் திட்டம்?
, செவ்வாய், 27 மே 2008 (16:10 IST)
கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பை ஈடுகட்ட, வருமான வரி மற்றும் நிறுவன வருமான வரிகளின் மீது மேல்வரி (செஸ்) அல்லது மிகை வரி (சர் சார்ஜ்) விதிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 135 டாலர் என்ற அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலையுயர்வினால் மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமெனில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.16.34ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.23.49ம் உயர்த்த வேண்டும். இப்படிப்பட்ட விலை உயர்வைத் தவிர்க்கவும், அதே நேரத்தில் இழப்பைக் குறைக்கவும் கச்சா இறக்குமதி மீதான இறக்குமதித் தீர்வையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தித் தீர்வையை குறைக்க வேணடும் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் நிதி அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். ஆனால், இறக்குமதித் தீர்வையை ரத்து செய்யவோ அல்லது உற்பத்தித் தீர்வையை குறைக்கவோ சிதம்பரம் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.50ம் உயர்த்த வேண்டும் என்ற பெட்ரோலியத் துறையின் கோரிக்கையும் ஏற்கபடவில்லை.

எனவே, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தனிநபர் மற்றும் நிறுவன வருமான வரியின் மீது (கல்விக்காக சிறப்பு மேல் வரி விதிக்கப்படுவதைப் போல) சிறப்பு மேல் வரி அல்லது மிகை வரி விதிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இன்றுள்ள நிலவரப்படி, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் இறக்குமதி செய்துவரும் கச்சாவிற்கு வரும் ஜூலை மாதம் வரை செலுத்தக் கூடிய அளவிற்குத்தான் நிதி உள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனம் வரும் செப்டம்பர் வரை செலுத்துவதற்குத்தான் நிதி உள்ளது. இந்த நிலையில் நிதி நிலை மேம்படுத்த (இழப்பைத் தடுக்க) பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்குவது அல்லது பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது அல்லது கார்கில் போருக்கு விதிக்கப்பட்டது போல மேல் வரி / மிகை வரி விதித்து நிதி திரட்டுவது என்பதில் ஏதாவது ஒரு முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

“எந்த நிலையிலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது, ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. இதிலிருந்து விடுபட உடனடித் தீர்வு கண்டாக வேண்டிய கட்டாயம் உள்ளது” என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.

பிரச்சனைக்குத் தீர்வாக பெட்ரோலிய அமைச்சகம் முன் வைத்த எந்த ஆலோசனையும் ஏற்கப்படவில்லை என்றும் முரளி தியோரா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil