பணவீக்க விகிதம் கடந்த 44 மாதங்களாக இல்லாத அளவு 7.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மே 3 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது. (அதற்கு முந்தைய வாரம் 7.61). பணவீக்க உயர்வுக்கு காரணம் உணவுப் பொருட்களின் விலையும், உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களின் விலை அதிகரித்தே.
இதற்கு முன்பு இதே மாதிரி 2004 ஆம் ஆண்டு 11 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.87 விழுக்காடாக அதிகரித்து இருந்தது.
2007 ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பணவீக்கத்தின் அளவு 5.74% ஆக இருந்தது.
இந்த ஆண்டு மே 3 தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலைப்பட்டியலில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றின் விலை 3%, காபி விலை 6%, மக்காச் சோளத்தின் விலை 4%, மைசூர் பருப்பு, மற்றும் மசாலா பொருட்களின் விலை 1% அதிரித்தது. இதே மாதிரி கோதுமை மாவு, தேங்காய் எண்ணெய், நாட்டு சர்க்கரை ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில் மத்திய அரசின் முன்முயற்சியால் சிமெண்ட், உருக்கு, இரும்பு பொருட்கள் ஆகியவறறின் விலை சிறிது குறைந்துள்ளது.
அதே நேரத்தில் தொழில் துறைக்கு தேவையான நாப்தா, உலை எண்ணெய், டீசல் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது.