விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதியளித்தார்.
விலைவாசி உயர்வினால் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 29 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 7.61 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இன்று புதுடெல்லியில் மத்திய அமைச்சரவையின் கூட்டமும், பொருளார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டமும் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு, நிதி அமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும் போது, விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த வெளியிடப்பட்ட பணவீக்கம் பற்றிய அறிவிப்பு, விலைகள் உயராமல் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இது பெரிய அளவில் நிம்மதியை கொடுக்கின்றது என்று கூறினார்.
பணவீக்கம் 7.57 இல் இருந்து 7.61 விழுக்காடாக மட்டுமே அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய சிதம்பரம், விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆனால் கணக்கீட்டு அளவில் கூற வேண்டுமெனில் முன்னேற்றமல்ல.
நான், முன்பு விலைவாசி குறைவதற்கு முன்பு, சில நாட்களுக்கு விலைகள் ஒரே மாதிரி இருக்கும் என்று கூறியது உண்மை என தெரியவந்துள்ளது.
அரசு ஏற்கனவே விலைவாசியை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நான்கு உணவு தானியத்திற்கு முன்பேர சந்தையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உருக்கு ஆலைகள் விலையை குறைக்க சம்மதிக்கவைத்துள்ளது.
சிமெண்ட் ஆலைகளையும் விலையை குறைக்க வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதுவும் நிர்வாக ரீதியான நடவடிக்கைதான். நாங்கள் ஒவ்வொருவரை பற்றியும் கவனத்தில் கொண்டுள்ளோம். அதனால்தான் பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகின்றோம்.
பெட்ரோலிய கச்சா எண்ணெயில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விலை 1 பீப்பாய் 124 டாலராக உயர்ந்துள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில், எந்த நாட்டிலும் பணவீக்கம் உயராமல், நிலையாக இருக்காது என்று கூறினார்.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது பற்றி கேட்டபோது, சிதம்பரம், இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதைப் பற்றியும், அதிகரிப்பதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் புகாராக கூறுகின்றனர் என்று வியப்படைந்தார்.
அவர் மேலும் கூறுகையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும், அரசும் சேர்ந்து நடவடிக்கை எடுக்கும் போது, இவை மெதுவாக பலன் அளிக்கும். அதனால் தான் பிரதமர் பெங்களூரில் பேசும்போது, இந்த நடவடிக்கைக்கு பலன் இருக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறியதை சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.