ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதி வாயிலாக திரட்டப்படும் முதலீடு, எந்த எந்த நகரங்களின் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீது முதலீடு செய்யலாம் என்று செபி நேற்று அறிவித்தது.
பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்காக பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு (மியூச்சுவல் பண்ட்) சென்ற வாரம் வெள்ளிக் கிழமை அனுமதி வழங்கியது.
இதன்படி திரட்டப்படும் முதலீடு எந்தெந்த நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்யலாம் என்று நேற்று செபி அறிவித்தது.
இதன்படி 2001 ஆம் வருட மக்கள் தொகை கணக்கெடுக்கின் அடிப்படையில், பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமுள்ள 35 நகரங்களின் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். செபி அறிவித்துள்ள 35 நகரங்களின் பட்டியலில் 27 மாநகராட்சிகளும் அடங்கியுள்ளது.
செபி ஏற்கனவே ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த யூனிட்டுகளின் மூலம் திரட்டப்படும் நிதியில் 35 விழுக்காடு ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும். மற்றவை ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த திட்டங்களில் திரட்டப்படும் மொத்த நிதியில் 30 விழுக்காட்டிற்கு மேல் ஒரே நகரத்தில் முதலீடு செய்ய கூடாது. மொத்த நிதியில் 15 விழுக்காட்டிற்கு மேல், ஒரே ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ய கூடாது. பங்குச் சந்தையில் பதிவு செய்யாத நிறுவனத்தில் 25 விழுக்காட்டிற்கு மேல் முதலீடு செய்ய கூடாது என அறிவித்துள்ளது.