உணவு பொருட்கள், மீன் விலை அதிகரித்ததால் பணவீக்கம் 7.33 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு ஏப்ரல் 12 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் பணவீக்க விகிதம் 7.33 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது. (சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்க விகிதம் 6.34 விழுக்காடாக இருந்தது).
இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 7.14 விழுக்காடாக இருந்தது.
விலை வாசி உயர்ந்துள்ளதால் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஏப்ரல் 29 ந் தேதி அறிவிக்க போகும் கடன் கொள்கையில் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே பணவீக்க இருப்பு விகிதத்தை அரை விழுக்காடு ( ஏப்ரல் 26 மற்றும் மே 10 இரு தவணைகளில) அதிகரித்துள்ளது. இதனால் சுமார் ரூ.18,400 கோடி பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படும்.
பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த இடதுசாரி தலைவர்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.
இன்று மக்களவையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். அத்துடன் உலக அளவில் விலைகள் உயர்ந்து வருவதால், இங்கும் விலைகள் அதிகரிப்பகின்றது. ஆனால் இந்த நிலை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதே நேரத்தில் பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கையால் வளர்ச்சி விகிதம் குறையும் என்றும் சிதம்பரம கூறினார்.