ரயில் மூலம் கோதுமையை அனுப்புவதற்கு ரயில்வே தடை விதித்துள்ளதால், ரவை, மைதா விலை உயரும் என்று தெரிகிறது.
கோதுமை பற்றாக்குறையை சமாளிக்கவும், இதன் விலை உயராமல் இருக்க மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாபாரிகள், தனியார்கள் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கோதுமையை ரயில்வே வேகன் மூலம் அனுப்புவதற்கு தடை விதித்துள்ளது.
தனியார் வர்த்தகர்கள் கோதுமையை பதுக்கி வைத்து செயற்கையாக விலை உயர்த்துவதாக கூறி, வேகன் மூலமாக கோதுமை அனுப்புவதை ரயில்வே தடை செய்துள்ளது.
இதனால் கோதுமையை பயன்படுத்தி ஆட்டா (கோதுமை மாவு), மைதா, ரவை ஆகியவற்றை தயாரிக்கும் ஃப்ளவர் மில்கள், வட மாநிலங்களில் இருந்து கோதுமையை லாரி மூலம் கொண்டுவர வேண்டும். இதனால் இவற்றின் சரக்கு கட்டணம் அதிகரிப்பதுடன், கோதுமையின் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள ஃப்ளவர் மில்கள் அதிகளவு பாதிக்கப்படும்.
இதன் விளைவாக இவை ஆட்டா, ரவை, மைதா விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.
தென் மாநிலங்களில் உள்ள ஃப்ளவர் மில்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேஷம், குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கோதுமையை கொள்முதல் செய்கின்றன.
இவை முன்பு சரக்கு ரயில்கள் மூலம் கொண்டுவரப்பட்டன. இப்போது லாரிகள் மூலம் கொண்டுவர வேண்டியதிருப்பதால் போக்குவரத்து கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கும்.
ஏற்கனவே வட மாநிலங்களில் இருந்து வரும் ஆட்டா, ரவை, மைதா ஆகியவைகளுடன் போட்டியிட முடியாத சூழ்நிலையில் தென் மாநில ஃப்ளவர் மில்கள் உள்ளன.
இந்நிலையில் ரயில்வே சரக்கு வேகன்களில் கோதுமை போக்குவரத்திற்கு தடை விதித்து இருப்பதால், தென் மாநில ஃப்ளவர் மில்கள் பாதிக்கப்படுவதுடன், ஆட்டா, மைதா, ரவை விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.