Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காடு!

உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காடு!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (19:19 IST)
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2008-09 நிதி ஆண்டில் 7.9 விழுக்காடாக மட்டுமே இருக்கும். அதிகரித்து வரும் பணவீக்கம், கடனுக்கான வட்டி உயர்வால் பொருட்களின் விற்பனை குறைந்து, தொழில் துறை பாதிக்கப்படும் என்று ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதன் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை கொண்டே கணக்கிடப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைதான் பொதுவாக பொருளாதார வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றார்கள்.

அசோசெம் என்று அழைக்கப்படும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பு இந்த நிதி ஆண்டில் (2008-09) உள்நாட்டு மொத்த உற்பத்தி எப்படி இருக்கும் என்று ஆய்வை நடத்தியுள்ளது.

இதில் கலந்து கொண்டவர்களில் 66 விழுக்காடு பேர் அமெரிக்க பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, அதிக அளவு வட்டி, மூலப் பொருட்களின் தட்டுப்பாடு, விலை ஏற்றம் அத்துடன் நுகர்வோர்களின் வாங்கும் திறன் குறைவது ஆகியவை உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உள்நாட்டு உற்பத்தி 7.9 விழுக்காடாகவே இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்போரில் 75 விழுக்காட்டினர், பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை ஏற்றம், உலோகங்களின் விலை உயர்வு ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்ற நிதி ஆண்டில் (2007-08) ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் நுகர்வோர் பொருள் உற்பத்தி 1 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 74 விழுக்காட்டினர், வட்டி அதிகரித்ததால் நுகர்வோர் பொருட்கள் விற்பனை குறைந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். இரும்பு, சிமெண்ட் விலை உயர்வால் கடந்த 11 மாதமாக கட்டுமானத்துறையின் வளர்ச்சி குறைவாக இருப்பதாகவும், எதிர்காலத்திலும் கட்டுமானத்துறையின் வளர்ச்சி நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் இல்லை என்று 69 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசு உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதாலும், தனியார் நிறுவனங்கள் கட்டுமானத்துறையில் அதிக அளவு ஈடுபட்டதால் இரும்பு, சிமெண்ட் ஆகியவைகளின் தேவை அதிக அளவு இருந்தது. ஆனால் தற்போது இதன் தேவை குறைந்துள்ளது.

உருக்கு துறை வளர்ச்சி 11.1 விழுக்காட்டில் இருந்து 5.1 விழுக்காடாகவும், சிமெண்ட் துறை வளர்ச்சி 9.9 விழுக்காட்டில் இருந்து ஏழு விழுக்காடாக குறைந்துவிட்டது.

இரண்டு சக்கர,. நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை குறைந்ததற்கு காரணம், கடனுக்கான அதிக அளவு வட்டி, உரிய காலத்தில் கடன் கிடைக்காமை, மூலப் பொருள்களின் விலை உயர்வு ஆகியவைகளே காரணம் என்று ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 75 விழுக்காடு பேர் தெரிவித்தனர். வாகனங்களின் விற்பனை குறைந்ததால், உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டன.

2006-07 நிதி ஆண்டில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் சேர்த்து மொத்தம் 1,01,23,988 வாகனங்கள் விற்பனையாயின.

இது சென்ற நிதி ஆண்டில் 96,48,105 ஆக குறைந்து விட்டது.

இந்த பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை அதிகரித்து இருப்பதால், மக்களிடம் செலவழிக்க கூடுதல் பணம் இருக்கும். ஆனால் இதன் பலன் ரிசர்வ் வங்கி எடுக்கும் பொருளாதார கட்டுப்பாட்டு நடவடிக்கையை பொறுத்தே இருக்கும் என்று 78 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

2007-08 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 மாதத்தில் விவசாய துறை வளர்ச்சி 3.5 விழுக்காடாக மட்டுமே இருக்கின்றது. இந்த துறையின் முதலீடு தொடர்ந்து குறைவாக இருக்கின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.5 விழுக்காடாகவே இருக்கின்றது. இவை அதிகரிக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil