இன்றுடன் கடந்த மூன்று நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு (பவுன்) ரூ.880 (கிராமிற்கு மட்டும் ரூ.110) குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 17-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ஒரே நாளில் ரூ.485 அதிகரித்தபோது, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவாக ரூ.10,040-யை தாண்டியது. தங்க பட்டறைகள் படுத்துவிடுமோ என்றும் அதன் பணியாளர்கள் அச்சம் கொண்டனர்.
'இதேவிலை நீடித்தால் திருமணம், பண்டிகை என எந்த விசேடத்திற்கும் தங்கம் வாங்குவதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது' என்று கூட நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, பணக்காரர்களும் நினைத்தனர்.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றுடன் கடந்த மூன்று நாட்களில் ரூ.880 குறைந்திருப்பது ஏழைகளையும் ஏரெடுத்துப் பார்க்க வைத்துள்ளது.
தங்கத்தின் விலை 18-ம் தேதி முதல் இறங்குமுகமாகவே இருந்து வந்தது. அன்று 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10,040 லிருந்து ரூ.9,808 ஆக குறைந்தது. தொடர்ந்து 19-ம் தேதியும் குறைந்து ரூ.9,648 ஆக இருந்தது. மூன்றாவது நாளாக, இன்று ஒரே நாளில் ரூ.488 குறைந்து 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.9,160 ஆக உள்ளது. இதன்படி, கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.
கிராம் விலையை ஒப்பிடும்போது, 17-ம் தேதி ரூ.1,255 லிருந்து மூன்றுநாட்களில் ரூ.110 குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.61 குறைந்துள்ளது.
சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யவேண்டும் என்ற அழுத்தமே விலை குறைவுக்கு முக்கிய காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த விலை குறைவு தொடர்ந்து நீடிக்குமா? என்பதுதான் உறுதியாகத் தெரியவில்லை!
இதனால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் எல்லாம் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாகத்தான் சிலர் நினைக்கின்றனர்.