ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ஐந்து பங்குகளுக்கு 3 போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது.
அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பொதுப் பங்குகளை ரூ.430 முதல் ரூ.450 என்ற விலையில் வெளியிட்டது. இதற்கு முதலீட்டாளகள் மத்தியில் அதிகளவு வரவேற்பு இருந்தது. இதன் பங்குகள் பங்குச் சந்தையில் பிப்ரவரி 11ஆம் தேதி விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது. அன்று முதல் இதன் விலைகள் வெளியீட்டு விலையை விட குறைந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் குறிப்பாக சில்லரை முதலீட்டாளர்கள் கடுமையான அதிருப்தியில் இருந்தனர். இவர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு போனஸ் பங்குகளை அறிவிக்க இருப்பதாக, இந்நிறுவனம் சென்ற வாரம் கூறியது.
இதன் படி நேற்று ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் போனஸ் பங்குகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி தற்போது 5 பங்குகளுக்கு மூன்று பங்குகள் போனஸ் பங்குகளாக வழங்கப்படும்.
இந்த போனஸ் பங்குகள் வழங்குவதன் மூலம், 1 பங்கு ரூ.430 என்ற விலையில் வாங்கிய சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கின் விலை ரூ.269 ஆகவும், ரூ.450 கொடுத்து பங்குகளை வாங்கிய மற்ற பிரிவு முதலீட்டாளர்களுக்கு 1 பங்கு ரூ.281 என்ற விலையாக குறைந்துள்ளது.