இது பங்குச் சந்தைக்கு கஷ்டமான காலம் தான். தொடர்ந்து வர்த்தகம் குறைந்தும், குறியீட்டு எண்கள் சரிந்தும் வருகின்றன. தகவல் தொழில் நுட்பம், பெட்ரோலிய நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவன பங்குகள் அதிக அளவு விற்பனை செய்கின்றனர்.
மிட் கேப், சுமால் கேப் பிரிவில் உள்ள பங்குகளின் விலையும் குறைகின்றது. மற்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையிலும் இதே நிலைதான்.
9ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் பணவீக்க விகிதம் 4.35 விழுக்காடாக உயர்ந்து விட்டது. இதற்கு முந்தைய வாரத்தில் 4.07 விழுக்காடாக இருந்தது.
அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு பங்கு சந்தை பட்ஜெட்டை எதிர்பார்த்துள்ளது. அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வருகிறது. பட்ஜெட் 29 ஆம் தேதி சமர்ப்பிக்கபட உள்ளது. ஆனால் பங்குச் சந்தையில் பட்ஜெட்டின் தாக்கம் சிறிதும் இல்லை.
வெள்ளிக் கிழமை காலையில் உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் வாங்குவதை காண முடிந்தது. குறிப்பாக டிஸ்கோ,செயில், ஸ்டெர்லைட்,ஹின்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு வாங்கினார்கள்.
பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எப்.சி வங்கி, சத்யம், ரிலையன்ஸ், டி.சி.எஸ், பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்தார்கள். மொத்தம் ரூ.51,253.24 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
திங்கட் கிழமை எப்படி ?
திங்கட் கிழமை பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்று கணிப்பது மிக சிரமமானது. பங்குச் சந்தையில் ஆர்வம் இல்லாமை, மற்ற நாடுகளில் பங்குகளின் விலை சரிவு, பட்ஜெட் எதிர்பார்ப்பு, குறைந்த அளவு வர்த்தகம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருவது என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது.
இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், திங்கட் கிழமை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரிக்குமா அல்லது சரியுமா என்பதை உறுதியாக கூறுவது சிரமம். ஆனால் தினசரி வர்த்தக புள்ளி விபரங்களை ஆய்வு செய்து பார்க்கையில் திங்கட் கிழமை காலையில் குறியீட்டு எண்கள் குறையும் என்றே நினைக்க வேண்டியதுள்ளது. காலையில் நிஃப்டி 5020/5000 என்ற அளவில் தொடங்கும். ஆனாலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து நிஃப்டி 5130 என்ற அளவில் தொடரும்.
நிஃப்டி 5165/5200/5235 என்ற அளவு உயரும். 5235 க்கும் அதிகரித்தால், பிறகு 5255/5315 என்ற அளவுக்கு உயரும். இதற்கு மாறாக நிஃப்டி 5070/5020/5000 என்று சரிந்து 5000 க்கும் குறைந்தால், அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வதை காணலாம். இதனால் குறியீட்டு எண் 4960/4930 என்ற அளவிற்கு சரியும்.