மிளகு, சாதிக்காய், கறுவாப்பட்டை உள்ளிட்ட உணவுக்கு நறுமணமூட்டும் மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
நடப்பு 2007- 08 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மசாலா வாசனைப் பொருட்களின் ஏற்றுமதி 3,49,775 டன்களாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3,485 கோடியாகும். கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் 2,92,185 டன்கள் ஏற்றுமதி செய்தது. இதன் மதிப்பு ரூ.2,850.45 கோடியாகும்.
டாலர் மதிப்பில் கடந்த நிதியாண்டில் 792.95 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மசாலா ஏற்றுமதி நடப்பாண்டில் 864.95 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த 10 மாத காலத்தில் மிளகுத் தூள் 29,300 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.427.63 கோடியாகும். மிளகாய் வத்தல் 1,57,500 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு 848.37 கோடி ரூபாயாகும்.
இந்திய மசாலா வாசனைப் பொருட்களின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக மலேசியா விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக வங்கதேசம்,இலங்கை, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.