நலிவடைந்த பிரிவினருக்கு நிதி சேவை வழங்குவதற்காக இரண்டு நிதியங்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
இது குறித்து மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நிதி உள்ளடக்க நிதியத்திற்கு ஐந்தாண்டு காலத்தில் அதிகபட்ச தொகையாக ரூ.200 கோடியையும், நிதி உள்ளடக்க தொழில்நுட்ப நிதியத்திற்கு ஐந்தாண்டு காலத்தில் அதிகபட்சம் ரூ.200 கோடியை மத்திய அரசு வழங்குவது ஆகிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிதி உள்ளடக்க நிதியம், நிதி உள்ளடக்க தொழில்நுட்ப நிதியம் ஆகியவை அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2006-07-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அறிவித்திருந்தார். இந்த நிதியம் ஒவ்வொன்றும் ரூ.500 கோடி அளவிலானது. மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி ஆகியவை இந்த நிதியங்களுக்கான நிதி ஆதாரங்களுக்கு துவக்கத்தில் பங்களிப்பு செய்யும்.
நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்கும் பின்தங்கிய பிராந்தியங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அதிக அளவில் நிதி சம்மந்தமான சேவை வழங்க உதவும் மேம்பாடு மற்றும் ஊக்கப் பணிகளுக்கு ஆதரவு தரும் வகையில் நிதி உள்ளடக்க நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் முதலீட்டை அதிகரிப்பதற்காக நிதி உள்ளடக்கிய தொழில்நுட்ப நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்கு குறைந்த செலவில் போதுமான கடன் வசதியும், நிதி சேவைகளும் காலத்தோடு கிடைப்பதை இந்த நிதியங்கள் உறுதி செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.