பாரத ஸ்டேட் வங்கியின் உரிமைப் பங்குகளை விற்பதற்காகச் சிறப்புக் கடன் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பாரத ஸ்டேட் வங்கியின் உரிமைப் பங்கு வெளியீட்டில் மத்திய அரசு பங்கேற்கும் முந்தைய முடிவில் ஒரு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியது.
புதிய முடிவின்படி சந்தைப்படுத்தக் கூடிய சிறப்பு கடன் பத்திரங்களை வெளியீட்டு, ரூ.9,995.99 கோடி அளவிலான பாரத ஸ்டேட் வங்கியின் உரிமைப் பங்குகளை அரசு வாங்கும்.
2008-09-ம் ஆண்டில் ரூ.1,449 கோடி ஈவுத் தொகையாகவும் வரிகளாகவும் அரசுக்கு பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து கூடுதலாக கிடைக்கலாம். உத்தேச கடன் பத்திரங்களுக்கான வட்டியாக வங்கிக்கு இதே காலத்தில் ரூ.825 கோடியை அரசு வழங்கும்.
எனினும் வரும் ஆண்டுகளில் இந்த வங்கியிடமிருந்து அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கக் கூடும். 2009-10-ம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.1,683 கோடியாகவும் 2010-11-ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் இந்த தொகை ரூ.2,049 கோடியாகவும் இருக்கக் கூடும்.
மூலதனம் அதிகரிக்கப்படுவதால் இந்த வங்கியின் வளர்ச்சி அதிகரிப்பதுடன் வங்கியின் ஒட்டுமொத்த செயல்பாடும் மேம்படும். இதனால் வங்கித் துறையில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பாரத ஸ்டேட் வங்கி தனியிடத்தை பெறும்.
அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் பாரத ஸ்டேட் வங்கியின் உரிமைப் பங்குகள் அரசுக்கு கிடைத்துவிடும். அதன் பிறகு இந்த பத்திரங்களை குறித்த காலத்தில் மீட்பதற்காக கடன் பத்திர மீட்பு நிதியம் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.