பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் கடனுக்கான வட்டியை கால் விழுக்காடு குறைத்துள்ளது.
இந்த வங்கி தற்போது 12.50 விழுக்காடு வட்டியை விதிக்கிறது. இது 12.25 விழுக்காடாக குறையும். புதிய வட்டி விகிதம் வரும் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த பத்து நாட்களில் இரண்டாவது தடவையாக, ஸ்டேட் வங்கி வட்டியை குறைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 11ஆம் தேதி கால் விழுக்காடு வட்டியை குறைத்தது நினைவிருக்கலாம்.
கடனுக்கான வட்டியை குறைத்து இருப்பதால், வைப்பு தொகைக்கு வங்கி கொடுக்கும் வட்டியும் குறைக்கப்படுமா? என்று கேட்டதற்கு, இதன் மூத்த அதிகாரி பதிலளிக்கையில், நிலைமையை பரிசீலித்து வருகின்றோம். தேவையான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
வீட்டு கடன், வாகனம் போன்ற நுகர்வோர் கடன்கள் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. இது வங்கிகள் மத்தியில் மட்டுமல்லாது மத்திய அரசுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்ததால், தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு சென்ற மாதம் ரிசர்வ் வங்கி மூன்றாவது காலாண்டி நிதி நிலை ஆய்வறிக்கையை வெளியிடும் போது, பொருளாதார வளர்ச்சி மந்தம், பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவைகளை பற்றி குறிப்பிட்டு காட்டியது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வங்கிகளின் சேர்மன், மேலாண்மை இயக்குநர்கள் கூட்டத்தில் பேசும் போது, வங்கிகள் வட்டியை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை தொடர்ந்து வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைத்தன. இப்போது ஸ்டேட் வங்கி இரண்டாம் முறையாக கால் விழுக்காடு வட்டியை குறைத்துள்ளது.
இதே போல் யூனியன் பாங்க் ஆப் இந்தியா அரை விழுக்காடு வட்டி குறைத்துள்ளது. இப்போது இந்த வங்கி 13.25 விழுக்காடு வட்டி வசூலித்து வருகிறது. இதை 12.75 விழுக்காடாக குறைத்துள்ளது.
கனரா வங்கியும் வட்டியை கால் விழுக்காடு குறைத்துள்ளது. இதன் புதிய வட்டி விகிதம் 12.75 விழுக்காடு.
பாங்க ஆப் இந்தியா வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது. மேலும் பல வங்கிகள் வட்டியை குறைக்கும் என தெரிகிறது.