இந்தியாவில் சமூக பாதுகாப்பு இல்லாததுதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 விழுக்காடு அளவுக்கு சேமிப்பு விகிதம் உயரக் காரணம் என்று என்.சி.ஏ.இ.ஆர். - மேக்ஸ் நியுயார்க் லைஃப் சர்வே ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் சமூக பாதுகாப்பு இல்லாததுதான் மக்களில் 80 விழுக்காட்டினர் சேமிப்புகளில் அதிகம் அக்கறை காட்டி வருவதாகவும், இதனால்தான் இந்திய சேமிப்பு விகிதம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.
அன்றாட வாழ்க்கையில் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறுக சிறுக சேமிப்பது தங்கள் குழந்தைகளின் கல்வி,திருமணம், சமூக நிகழ்ச்சிகள், முதுமைக் காலத்தில் வருவாய் ஈட்ட முடியாத காலத்தில் வாழ்வதற்கு, எதிர் காலத்தில் வீடுகட்ட எனப் பல்வேறு கனவுகளின் அடிப்படையில் தான் சேமிக்கின்றனர்.
நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு சேமிப்புகள் பணமாக, வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களில் சேமிக்கப் படுகின்றன. ஐந்தில் ஒரு பங்கு சேமிப்புகள் ஆயுள் காப்பீட்டு காப்புறுதித் தவணைத் தொகைகளாகவும், 7 விழுக்காடு சேமிப்புகள் பங்கு பத்திரங்களிலும், நீண்ட கால வைப்பு நிதித் திட்டங்களிலும் சேமிக்கப் படுவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள குடும்பங்களில் 18 விழுக்காட்டினர் மாத வருவாய் ஈட்டும் பட்டியலில் வருகின்றனர்.இவர்கள் தான் மிகப்பெரிய சேமிப்பாளர்கள். இந்த பிரிவினர் நாட்டிலேயே அதிகபட்சமான ஊதியத்தை அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.08.620-யை சம்பாதிக்கின்றனர்.
மாத வருவாய் வாங்கும் பிரிவினர் அதிக அளவில் சேமிப்பதாகவும், அதாவது மொத்த சேமிப்புத் தொகையில் இப்பிரிவினரின் பங்களிப்பு 33 விழுக்காடாகும்.
அவசர காலத்திற்கு உதவும் என்பதற்காக சேமிப்பவர்களின் எண்ணிக்கை 83 விழுக்காடாக உள்ளது. குழந்தைகள் கல்விக்காக சேமிப்பவர்களின் எண்ணிக்கை 81 விழுக்காடாகவும் உள்ளது. இதனாலேயே பெரும்பாலான இந்திய குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலும் செலவு செய்யாமல் சிக்கனமாக இருந்து வருவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய திட்டக் குழுத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, இந்த ஆய்வு முடிவுகள் ஆய்வு மேற்கொள்வது அடிப்படையில் இந்திய குடும்பங்களின் வருமானத்தைக் கணக்கீடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்திய குடும்பங்களின் பொருட்கள் வாங்கும் திறன் தொடர்பாக தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், நாட்டில் நிலவும் பல்வேறு வேறுபாடான சமமற்ற வருவாய் முறையால் தெளிவான நிலை தெரிய வரவில்லை என்றும், அதனால் தான் இந்த அளவு சேமிப்பு வீதம் உள்ளதாகவும் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். வருவாய் சமச்சீரற்ற நிலையை கினி கோஎஃபிசியன்ட் முறையில் கணக்கிடுவதே பொருளாதார சமச்சீரற்ற தன்மையை எடைபோட சரியானது என்றும் கூறியுள்ளார்.
நாடு சுதந்திரமடைந்தது தொடங்கி இதுவரை இந்திய வங்கி முறை எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து காணப்படும் இந்த நிலையில் கூட இன்னும் 36 விழுக்காட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சேமிப்பை வீட்டிலேயே சேமிக்க விரும்புவது அந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டில் 51 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பை வங்கிகளில் சேமிக்க விரும்புகின்றனர்.
அஞ்சலக சேமிப்புகளில் சேமிக்க 5 விழுக்காட்டினர் விரும்புவதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்னும் சில குடும்பங்கள் கூட்டுறவு சேமிப்பு, மாதாந்திர, வருடாந்திர சீட்டுத் திட்டங்களிலும், பங்குப் பத்திரங்கள் உள்ளிட்ட பிற சேமிப்பு முறைகளிலும் சேமிக்க விரும்புவது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் 2 விழுக்காட்டினர் தான் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் சேமிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் உள்ள 66 தேசிய மாதிரி ஆய்வு மண்டலங்களுக்கு உட்பட்ட 250 மாவட்டங்களில் உள்ள 1,976 கிராமங்கள், 342 நகரப் பகுதிகளில் உள்ள 4,40,000 குடும்பங்களில் முதல்கட்டமாக தகவல்கள் திரட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த தகவல்களில் இருந்து 63,016 குடும்பங்களின் தகவல்கள் அடிப்படையில் இந்த முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள குடும்பங்களில் 69 விழுக்காட்டினர் வயதான காலத்தில் நிதிப் பாதுகாப்புக்காகவும், 63 விழுக்காட்டினர் எதிர்காலச் செலவுகளான குழந்தைகளின் கல்வி, திருமணம், சமூக விழாக்கள் ஆகியவற்றுக்கும், வீடுகட்ட, வாங்க, தொழிலை மேம்படுத்த, விரிவுப்படுத்த 47 விழுக்காட்டினரும் சேமிப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமூக விழாக்களுக்காக நகர்புறங்களில் உள்ள குடும்பத்தினர் 60 விழுக்காடும், கிராமப் புறங்களில் உள்ள குடும்பத்தினர் 64 விழுக்காட்டினரும், ஒட்டுமொத்தத்தில் நாடு முழுவதும் 63 விழுக்காட்டினர் சேமிப்பது தெரிய வந்துள்ளது. வீடு வாங்கவோ, கட்டவோ சேமிப்பவர்களில் கிராமப் புறத்தினர் 45 விழுக்காடு அளவுக்கும், நகர்புறத்தினர் சற்று கூடுதலாக 51 விழுக்காடு குடும்பத்தினரும் சேமிப்பில் ஈடுபடுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.