மந்தமான வேளாண்மை, அதிகமான வட்டிவிகிதம் ஆகியவற்றால், தொழிற்சாலை உற்பத்திப் பெருக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டில் நமது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 8.7 விழுக்காடாகக் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2006-07 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 9.6 விழுக்காடாக இருந்த நிலையில் இத்தகைய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள, தேசத்தின் ஒட்டுமொத்த வருவாய் பற்றிய முன்கூட்டிய கணிப்பு அறிக்கையில், "1999-2000 ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகையில், 2007- 08 ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.31,14,452 கோடியாக இருக்கும். இது 2006- 07 ஆம் ஆண்டில் ரூ.28,64,310 கோடியாக இருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்கூட்டிய கணிப்பு அறிக்கையின் அடிப்படையில், இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 9.1 விழுக்காடாக இருக்கும். அதாவது, முதல் காலாண்டில் 9.3 விழுக்காடாகவும், அடுத்த மூன்று மாதங்களில் 8.9 விழுக்காடாகவும் இருக்கும்.
இதனடிப்படையில் முழு நிதியாண்டையும் கணக்கிட்டால், ரிசர்வ் வங்கியின் கணிப்பான 8.5 விழுக்காட்டிற்கு சிறிது அதிகமாகவும், ஆனால் NCAER அமைப்பின் கணிப்பான 9.1 விழுக்காட்டிற்குக் குறைவாகவும் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இருக்கும்.
ஆனால், 2007-08 ஆம் நிதியாண்டில் நமது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமான வட்டி விகிதங்கள் உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்துகிறது. நுகர்வுப் பொருட்களுக்கான தேவையைக் குறைத்து, உற்பத்தி வளர்ச்சியை பாதிக்கிறது.
இந்த நிதியாண்டில், உற்பத்தித்துறை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 9.4 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வேளாண்மை, அதைச் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி 2.6 விழுக்காடு இருக்கும் என்றும் முன்கூட்டிய கணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேளாண்மை, அதைச் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 3.8 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது