இந்திய ஆயுள் காப்பீடு கழகம் (எல்.ஐ.சி.) முதன் முறையாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அத்துடன் இதில் செலுத்தப்படும் பிரிமியம் (காப்பீடு கட்டணம்) பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலுத்தப்படும் பணம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்.ஐ.சியின் இந்த மருத்துவ காப்பீடு திட்டம், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் (கணவன், மனைவி, குழந்தைகள்). இந்த காப்பீடு செய்து கொண்டவர் மருத்துவ மனையில் 48 மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.250 முதல் ரூ.2,500 வரை மருத்துவமனை கட்டணமாக வழங்கப்படும். அவரின் மனைவி அல்லது குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கு ரூ,1500 வரை மருத்துவ கட்டணமாக வழங்கப்படும்.
பெரிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படும். இது காப்பீடு செய்து கொண்ட தொகைக்கு ஏற்பவும் அறுவை சிகிச்சையின் தன்மைக்கு ஏற்பவும் மாறுபடும்.
இந்த காப்பீடு செய்து கொ்ண்டவர்கள் மூன்று வருடத்திற்கு பிறகு, இதில் இருந்து விலகலாம். அவர்கள் கட்டிய தொகையை வீட்டில் இருந்து கொண்டே சிகிச்சை செய்து கொள்ள அல்லது மருத்துவ செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் செலுத்தப்படும் பிரிமியம் ஹெல்த் ப்ளஸ் பண்ட் என்ற திட்டத்தின் கீழ் உள்ள யூனிட்டுகளில் முதலீடு செய்யப்படும். இது 10 முதல் 50 விழுக்காடு வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். உதாரணமாக காப்பீடு செய்து கொள்பவர் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் பிரிமியம் செலுத்தினால், அதில் ரூ.1,614 மருத்துவ காப்பீடு கட்டணமாக பிடித்தம் செய்து கொள்ளப்படும். மீதம் உள்ள தொகை ஹெல்த் ப்ளஸ் பண்ட் யூனிட்டுகளில் முதலீடு செய்யப்படும். 65 வயது வரை காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்து கொண்ட காலம் முடிவடையும் போது, மீதம் உள்ள தொகை வழங்கப்படும். காப்பீடு செய்து கொண்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இறந்தாலும், மற்றவர்களுக்கு காப்பீடு தொடரும்.
இந்த காப்பீடு கட்டணத்திற்கு வருமான வரி 80டி பிரிவின் கீழ், வருமான வரி விலக்கு பெறலாம். அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரையிலும், மூத்த குடிமக்கள் எனில் ரூ.20 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.