வரி செலுத்துபவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பாக வருமான வரித்துறையை மாற்றுவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சப் ப.சிதம்பரம் கூறினார்.
சென்னையில் அதிக அளவு வரி செலுத்துவோர்களுக்கான சிறப்பு மையம் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவு வருமான வரி, கலால் வரி (உற்பத்தி வரி), நிறுவன வரி, சேவை வரி செலுத்துபவர்கள், ஒரே இடத்தில் தங்கள் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம்.
இங்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் மத்திய கலால் வரி அல்லது சேவை வரியை செலுத்துபவர்கள், ரூ.10 கோடிக்கு மேல் அட்வான்ஸ் வரி எனப்படும் முன் கூட்டியே வரி செலுத்துபவர்கள் ஆகியோரின் கணக்கு பராமரிக்கப்படும். இதை நேற்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வருமான வரித்துறை உட்பட வரிவசூலிக்கும் அமைப்புகளை, வரி செலுத்துபவர்களுக்கு உதவிகராமாக இருக்கும் அமைப்பாக மாற்றுவதில் உறுதியாக உள்ளது. இந்த மையம் அதிக அளவு வரி செலுத்துபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். வருமான வரித்துறை போன்றவை மக்களுக்கு எவ்வித சேவையையும் செய்வதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. எனது அமைச்சரகம் இந்த துறைகளை வரி செலுத்துபவர்களுக்கு உதவிகரமாகவும், சேவை வழங்கும் துறை என்ற கருத்தை ஏற்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ஒரே மாதிரியான, சமநிலையான வரி விதிக்கப்பட்டால், அதிக வரி வருவாய் இருக்கும். இது தான் எல்லா நாடுகளிலும் உள்ள நிலைமை. ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறாக இருக்கின்றது. இதற்கு காரணம் தெரியவில்லை.
இந்த சிறப்பு மையத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எம்.ஆர்.எப், முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், யூன்டாய் மோட்டார், இந்தியன் ஒவர்சீஸ் பாங்க் உட்பட 25 நிறுவனங்கள், அவைகளின் கணக்கை பராமரிக்க சம்மதித்து உள்ளன. இந்த நிறுவனங்கள் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வரி செலுத்துகின்றன என்று கூறினார்.