ரிசர்வ் வங்கி நாளை அறிவிக்க இருக்கும் பொருளாதார கொள்கையில் வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்பது பற்றி வங்கி துறை நிபுணர்களிடையே இரு வேறுபட்ட கருத்து நிலவுகிறது.
ரிசர்வ் வங்கி மூன்று மாதத்திற்கு ஒரு முறை, காலாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுகிறது. இதில் அடுத்த மூன்று மாதங்களுக்கான வட்டி விகிதங்கள், வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு போன்றவைகள் பற்றி முக்கியமான அறிவிப்பு வெளியாகும்.
ரிசர்வ் வங்கி முன்றாவது காலாண்டிற்கான ஆய்வறிக்கையை நாளை வெளியிடுகிறது. இதில் வங்கி வட்டி விகிதம் 25 முதல் 50 புள்ளிகள் வரை (கால் முதல் அரை விழுக்காடு ) குறைக்கப்படலாம் என்று ஒரு தரப்பு நிதிச் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
இவர்கள் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை சென்ற வாரம் முக்கால் விழுக்காடு குறைத்தது. இதை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என்று கருதுகின்றனர். இதனால் பணப்புழக்கத்தை சமாளிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பு நிதிச் சந்தை நிபுணர்கள் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர்.
கடந்த வாரம் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. இதனால் பங்குச் சந்தை வட்டாரங்களும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய ரிசர்வ் வங்கியும் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.