Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்நிய முதலீடு கட்டுப்படுத்தப்படாது : சிதம்பரம்!

அந்நிய முதலீடு கட்டுப்படுத்தப்படாது : சிதம்பரம்!
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (13:57 IST)
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்துள்ளதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள இந்தியா தக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். இதற்காக அந்நிய முதலீடு வருவதை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

மறுஈட்டுக் கடன், பொருளாதார தேக்கநிலை, வேலை இல்லா திண்டாட்டம், நுகர்வோர் வாங்கும் சக்தி குறைந்தது உட்பட பல்வேறு காரணங்களினால் அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதனை சரிக்கட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் 150 பில்லியன் டாலருக்கு வரி குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளார். இத்துடன் அமெரிக்க ரிசர்வ் வங்கி கடன் மீதான முக்கால் விழுக்காடு வட்டியை குறைப்பதாக் நேற்று முன்தினம் அறிவித்தது.

அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இந்த வட்டி குறைப்பினால் வருவாய் குறையும். இதன் விளைவாக பல்வேறு நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறையும்.

இந்த நஷ்டத்தில் இருந்து தற்காத்து கொள்ள அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்தியா போன்ற பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தை, நிதி சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள்.

இதேபோல் அந்நிய செலவாணி இருப்பாக அமெரிக்க டாலரை வைத்துள்ள நாடுகள், டாலரை விற்பனை செய்து விட்டு அதற்கு பதிலாக யூரோ, பவுண்ட் போன்ற நாணயங்களை வாங்குவார்கள். இதனால் டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் மேலும் குறையும்.

இவை ஒரளவு அமெரிக்காவுக்கு சாதகமான நிலை என்றாலும், இந்தியா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் நெருக்கடியை சந்திக்க வேண்டியதிருக்கும்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று கொண்டிருக்கும் 38வது உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க நிதி அமைச்சர் சிதம்பரம் சென்றுள்ளார்.

அவரிடம் செய்தியாளர்கள் இதை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என்று கேட்டபோது, இந்த நிலையை சமாளிக்க தேவையான பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்நிய முதலீடு வருவதை சிறிதளவு கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ரிசர்வ் வங்கி தேவையான முயற்சியை செய்யும். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றோம். அமெரிக்கா வட்டியைக் குறைத்ததால், இந்தியாவிற்கு அதிகளவு முதலீடு வருவது கவனத்தில் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அந்நிய முதலீட்டை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் மறுஈட்டுக் கடன் நெருக்கடி பற்றி கருத்து தெரிவித்த சிதம்பரம், இதனால் உடனடியாக இந்தியாவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் இனி வரும் மாதங்களில் ஏற்படலாம் என கருதுகின்றோம். இந்தியாவில் பணவீக்கத்தை ஈடுசெய்யும் வகையில் வட்டி விகிதம் அதிகளவு இருக்கின்றது. அதே நேரத்தில் இது வளர்ச்சியை பாதிக்கிறது.

மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 8.5 விழுக்காடாக இருக்கிறது.

ரிசர்வ் வங்கி ஜனவரி 29ஆம் தேதி காலாண்டிற்கான பொருளாதார கணிப்பு அறிக்கையை வெளியிடவுள்ளது. அப்போது அடுத்த மூன்று மாதங்களுக்கான வட்டி குறைப்பு அல்லது அதிகரிப்பு, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது, வங்கிகள் கடன் வழங்களுக்கு விதிமுறைகளை அறிவிக்கும்.

ஏற்கனவே ரிசர்வ் வங்கி ஆளுநர் ரெட்டி, விலைவாசி அதிகரிப்பதாலும், டாலரின் மதிப்பு குறைவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கருத்து அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil