Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச சந்தைகளின் சரிவே காரணம் : நிதி அமைச்சகம்!

Advertiesment
சர்வதேச சந்தை நிதி அமைச்சகம் பங்குச் சந்தை
, திங்கள், 21 ஜனவரி 2008 (21:29 IST)
சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவே இன்று இந்தியாவிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், இந்திய பொருளாதாரம் பலமானதாக உள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1408 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 496 புள்ளிகளும் சரிந்தன.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

“ஆசியாவில் உள்ள நாடுகளில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே பங்குகளை விற்பனை செய்யும் போக்கு ஆரம்பித்தது. பல நாடுகளில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. ஜனவரி 2 ஆம் தேதிய நிலவரப்படி மற்ற ஆசிய நாடுகளை ஒப்பிட்டால் இதன் குறியீட்டு எண்கள் சிங்கப்பூரின் ஸ்டெய்ட் டைம்ஸ் 14.75 விழுக்காடு, ஹாங்காங்கின் ஹாங்சாங் 13,58 விழுக்காடு, ஜப்பானின் நிக்கி 9.29 விழுக்காடு குறைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 13.97 விழுக்காடு குறைந்துள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவு சென்செக்ஸ் 1408.35 புள்ளி அல்லது 7.41 விழுக்காடு குறைந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 496.5 புள்ளிகள் அல்லது 8.7 விழுக்காடு குறைந்தது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9 விழுக்காடாக இருக்கும் என்று கூறியுள்ளது. தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் இலாபம், இநத நிதி ஆண்டின் மூன்றாவது காலண்டில் சிறப்பாக உள்ளது. இந்த ஒன்பது மாதத்தில் நேரடி வரி வருவாய், சென்ற வருடம் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 42.8 விழுக்காடு அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு முதலீடு அதிக அளவில் இருக்கும், கடன் கேட்பும் அதிக அளவில் இருக்கும் என்று வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளன.

எனவே நாட்டின் பொருளாதார கட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. பங்குச் சந்தையின் சரிவு, மற்ற நாடுகளில் ஏற்பட்ட நிலைமையின் எதிரொலியே. இந்திய பொருளாதாரம் பலவீனமடைந்ததால் அல்ல.

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் கவனமாக ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். சந்தையில் நிலவும் வதந்திகள், தேவையற்ற பீதியால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாத” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil