Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்கு சந்தை கட்டுப்படுத்துவது பலமாக உள்ளது!

பங்கு சந்தை கட்டுப்படுத்துவது பலமாக உள்ளது!
, செவ்வாய், 25 டிசம்பர் 2007 (18:24 IST)
பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்புகள் முன்பு இருந்ததைவிட தற்போது பலமாக இருக்கின்றது என்று நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் பிரேம் சந்த் குப்தா கூறினார்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பங்குகளை வாங்குவதற்கு முன் பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள் பற்றி நிறுவன விவகார அமைச்சகம் நேற்று நாளிதழ்களில் விளம்பரங்களை கொடுத்துள்ளது. இதே போன்ற விளம்பரத்தை சென்ற வாரம் மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் கொடுத்திருந்தன.

இது குறித்து நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் பிரேம் சந்த் குப்தா கூறுகையில், முன்பு இருந்ததை விட பங்குச் சந்தை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் இப்போது பலமாக இருக்கின்றன. பங்குகளில் முதலீடு செய்பவர்கள், குறிப்பிட்ட பங்கின் விலை அதிகரிக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக முதலீடு செய்ய கூடாது. பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனத்தை பற்றியும், அதன் நிறுவனர்களை பற்றியும் நன்கு விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் பல நிறுவனங்கள் புதிதாக பங்குகளை வெளியிட்டு கோடிக்கான ரூபாய்களை திரட்டின. இந்த பங்குகளை வாங்கி லட்சக்கணக்கானவர்கள் ஏமாந்தனர். இவை இரவோடு இரவாக காணாமல் மறைந்தன. ஆனால் இப்போது முன்பு இருந்த நிலை இல்லை. பங்குச் சந்தையை கண்காணித்து கட்டுப்படுத்தும் அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் நலனை பாதுகாப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலீட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக சிறு நகரங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
என்று தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில் பங்குச் சந்தையின் குறியீடு 691 புள்ளிகள் அதிகரித்துள்ளது பற்றி கேட்ட போது, அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, “நான் எப்போதுமே பங்குகளை வாங்குவதற்கு முன் ஜாக்கிரதையாக இருங்கள். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன் அந்த நிறுவனம், அதை நடத்துபவர்கள் பற்றிய விபரங்களை பரிசீலித்து பங்குகளை வாங்குங்கள” என்று கூறிவருவதாக தெரிவித்தார்.

முன்பு நிறுவன விவகாரத்துறை நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்தது. இது தனியான அமைச்சகமாக பிரிக்கப்பட்டு பிறகு, இதன் அமைச்சராக பிரேம் சந்த் குப்தா பொறுப்பேற்று கொண்டார். இவர் பங்குகளை வெளியிட்டு பொது மக்களிடம் கோடிக்கான ரூபாய் முதலீடாக திரட்டிய பிறகு மாயமாய் மறைந்த நிறுவனத்தை துவக்கியவர்களையும், இந்த மோசடியில் ஈடுபட்டவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil