மத்திய அரசின் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான மெட்டல் அண்ட் மினரல் டிரேடிங் காப்ப்பரேஷன் 3.5 லட்சம் கோதுமை இறக்குமதி செய்வதற்கான விலைப்புள்ளிகளைக் கோரியுள்ளது.
மத்திய அரசு சென்ற வருடம் வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. இதன் படி 13 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்வதற்கான உத்தரவுகளை வழங்கியது. இவை 1 டன் 389.45 டாலர் விலையில் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 1 கிலோ ரூ.17. இதற்கு பாரதிய ஜனதா, இடது சாரி கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அரசு உள்நாட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கோதுமைக்கு கிலோவுக்கு ரூ.10 க்கும் குறைவாக கொடுக்கின்றது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து ரூ.17 க்கும் அதிகமான விலையில் இறக்குமதி செய்கின்றன என்று கூறி கடும் கண்டனத்தை தெரிவித்தன.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது மீண்டும் கோதுமை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது. மத்திய அரசின் வசம் உள்ள இருப்பை அதிகரிக்க இறக்குமதி செய்வதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் 10 லட்சம் கோதுமையை இறக்குமதி செய்வதாக அறிவித்து இருந்தார்.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு மெட்டல் அண்ட் மினரல் டிரேடிங் காப்ப்பரேஷனிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் டன் கோதுமை இறக்குமதி செய்யும் பொறுப்பை வழங்கியுள்ளது. இதற்காக இந்நிறுவனம் அதன் இணைய தளத்தில் விலைப்புள்ளிகளை கோரியுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் இந்திய துறைமுகத்தில் ஒப்படைக்கும் அடிப்படையில் விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த கோதுமை மும்பை, முந்த்ரா, காகிநாடா, கண்ட்லா, சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறியபடி, இறக்குமதி செய்யப்படும் 10 லட்சம் டன் கோதுமையில், இந் நிறுவனத்திற்கு 3.5 லட்சம் டன் இறக்குமதி செய்ய உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் டன் கோதுமையை இறக்குமதி செய்யும் பொறுப்பு மத்திய வர்த்தக அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், பி.இ.சி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களிடம் கொடுக்கப்படும்.
இந்த நிறுவனங்கள் வெளியிடும் விலைப்புள்ளிகளுக்கு வரும் பதிலை பொறுத்து, எந்த அளவு கோதுமை இறக்குமதி செய்வது என இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
தற்போது சர்வதேச சந்தையில் 1 டன் கோதுமை விலை 400 டாலராக உள்ளது. இதற்கு காரணம் சர்வதேச சந்தையில் அதிகளவு கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடான ஆஸ்திரேலியாவில் வறட்சி நிலவுகிறது. அங்கு கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் உபரியாக இல்லை. சர்வதேச சந்தையில் கருங்கடல் பிராந்திய நாடுகளில் இருந்தே கோதுமை விற்பனைக்கு கிடைக்கின்றது.
சென்ற வருடம் உள்நாட்டு கோதுமை உற்பத்தி 690 லட்சம் டன்னுக்கும் குறைந்தது. இதன் காரணமாக மத்திய அரசின் தொகுப்பில் இருப்பை அதிகரிக்க கோதுமை இறக்குமதி செய்யப்படுகின்றது என அரசு அறிவித்தது. இந்தச வருடம் உள்நாட்டு கோதுமை இறக்குமதி 740 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அத்துடன் விவசாயிகள் கோதுமையை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வராமல், தங்கள் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டுள்ளனர்.
மத்திய அரசு கோதுமையின் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 என உயர்த்தியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கோதுமை பயிரிடும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த ரபி பருவத்தில் அதிகமான பரப்பளவில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்நாட்டிலேயே தேவையான கோதுமை கிடைக்கும் போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அரசின் முடிவிற்கு வியாபாரிகள் வியப்பு தெரிவித்துள்ளனர்.