தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் புதிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க தமிழக மின் வாரியத்திற்கும், பெல் நிறுவனத்திற்கும் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
முதலமைச்சர் கருணாநிதி, மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத் துறை அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், பாரத மிகுமின் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, பாரத மிகுமின் நிறுவனத்தின் தலைவர் அசோக் கே. பூரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் உயர் நுண்திறன் தொழில் நுட்பம் கொண்ட 800 மெகாவாட் திறனுடைய மின் உற்பத்தித் திட்டத்தை முதன் முதலாக நிறுவ உள்ளது.
இத்திட்டத்தில் உயர் நுண்திறன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதால் குறைந்த அளவில் கரி பயன்படுத்தப்படும்; நிலத் தேவையும் குறையும்; காற்று மாசுபடுதலும் குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். தூய்மை மேம்பாட்டு இயக்க அமைப்பின் கீழ் இத்திட்டத்திற்குக் கரிப்பொருள் சேமிப்பு வசதியும் கிடைக்கும். அனைத்து வகையிலும் சிறப்பு வாய்ந்த இத்திட்டம் 2011ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும்.
இத்திட்டம் உடன்குடி கிராமத்தில் 938 ஏக்கர் பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அமையும். கடற்கரையை ஒட்டியே இத்திட்டம் அமையவுள்ளதால், இதன் அருகிலேயே நிலக்கரியைக் கையாளுவதற்குத் தேவையான துறைமுகம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான குளிர்நீர் கடலிருந்தும், பதனிடாத நீர் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தின் மூலமும் பெறப்படும்.