அந்நிய நாடுகளில் இருந்து பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
வாஷிங்டனில் நடைபெற்று வரும் உலக வங்கி, சர்வதேச நிதியம் ( ஐ.எம்.எப் ) ஆகியவற்றின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ள சிதம்பரம், அங்கு பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய பங்குச் சந்தையில் முதலீடு வந்தால் அதை நிராகரிக்க மாட்டோம். இந்திய நிதிச் சந்தையில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. நிலைமைக்கு ஏற்ப தேவைப்படும் போது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செய்யும் முதலீட்டிற்கு பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பு ( செபி ) கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.
பார்சிபட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக முதலீடு செய்வது ஒளிவு மறைவு மி்க்கது என்பதால், இந்த வழியில் முதலீடு செய்வதற்கு பதிலாக பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பிடம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டு முதலீடு செய்யலாம் என்பதே மத்திய அரசின் யோசனை.
இவ்வாறு செய்தால் வெளிப்படை தன்மை இருக்கும். மேலும் அதிகாரிகளும் முதலீட்டாளர்களிடம் விசாரித்து சந்தேகங்களை தீர்த்து கொள்ள முடியும்.
பங்குச் சந்தையில் எடுத்த எடுப்பிலேயே பங்கேற்பு ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்துகின்றன. இதில் உள்ள சிக்கலை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது என்று சிதம்பரம் கூறினார்.