சமீப காலங்களில் இந்தியா கண்டுவரும் பொருளாதார வளர்ச்சி திருப்தியளிப்பதாக இருந்தாலும், அந்த வளர்ச்சியை தக்கவைக்க அதன் பொருளாதார வளர்ச்சி மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நிதியம் கூறியள்ளது!
வாஷிங்டனில் ஆசியாவின் இருபெரும் நாடாகளான இந்தியா, சீனா ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சி குறித்து உரையாற்றிய சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) ஆசிய-பசுபிக் பிரிவிற்கான இயக்குநர் டேவிட் பர்கர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திருப்தியளிப்பதாக இருந்தாலும், அதன் மீதுள்ள கடன் சுமையை குறைக்க வேண்டியது மட்டுமின்றி, தனது பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொண்டு விரிவுபடுத்தும் முகமாக கட்டுப்பாடுகளை நீக்கி தற்பொழுதுள்ள வளர்ச்சியை தக்கவைக்கும் பொருட்டு விரிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
விரிவான பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் திறந்த நிலை பொருளாதாரம் அவசியம் என்றும், குறிப்பாக உற்பத்தித் துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம் இந்திய மக்கட்தொகையில் பெருமளவிற்கு உள்ள இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் டேவிட் பர்கர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக அதிகரித்து வரும் அதே வேளையில், கடந்த சில ஆண்டுகளாக தனது நிதிப் பற்றாக்குறையை குறைத்திருப்பது முன்னேற்றமே என்றாலும், இந்தியாவும், சீனாவும் எதிர்கொண்டு வரும் சவால்களும் சாதாரணமானது அல்ல என்று டேவிட் பர்கர் கூறியுள்ளார்.