பங்குச் சந்தையின் சரிவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பார்ட்டிசிப்பட்டரி நோட் என்ற முறையில் பங்கு பெறுவதை தடை செய்யும் நோக்கமில்லை. இதை ஒழுங்குபடுத்தவும், முதலீட்டிற்கு உச்சவரம்பு விதிக்கவும் தான் ஆலோசித்து வருகின்றோம் என்று விளக்கமளித்தார்.
பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக நேற்று அறிவித்தது.
இந்த அந்நிய நிறுவனங்கள் தற்போது பார்ட்டிசிபட்டரி நோட் என்று அழைக்கப்படும் பங்கு கொள்ளும் முறையில் முதலீடு செய்கின்றன. இவ்வகை முதலீடுகளை தனி நபர்களும், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருப்பவர்களும் கூட்டு சேர்ந்து முதலீடு செய்கின்றனர்.
அதே போல் ஹெட்ஜ் பண்ட் என்று அழைக்கப்படும் முதலீட்டாளர்களும் முதலீடு செய்கின்றனர். இவர்கள் தினசரி அடிப்படையில் பங்குகளை வாங்குவதுடன், ப்யூச்சர் ஆப்சன் என்று அழைக்கப்படும் முறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு ஒரு மாதத்திற்கு பிறகு இந்த விலையாக அதிகரிக்கும் என்ற கணிப்பில் முதலீடு செய்கின்றனர்.
இப்படி முதலீடு செய்வதால் பங்குச் சந்தையில் அந்நியச் செலவாணி வரைமுறையில்லாமல் குவிகிறது. இதை கட்டுப்படுத்த நிதி அமைச்சகம் சில மாதங்களாகவே ஆலோசித்து வருகிறது. இந்த பிரச்சனையில் நிதி அமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
சில வாரங்களாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பங்குச் சந்தையில் ஊக வணிகம் நடைபெறுகிறது என்று எச்சரித்து, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யமால் பரஸ்பர நிதிகள் மூலம் முதலீடு செய்யும் படி அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை செபி அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் பார்டிசிபேட்டரி நோட் முறையில் முதலீடு செய்வதற்கும், ப்யூச்சர், டெரிவேட்டிவ் போன்றவைகளுக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்ற ஆலோசனையை கூறியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்ததால், பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், நிப்டி சரிந்தது. பங்கு வர்த்தகமும் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
பங்குச் சந்தை நேரடி நிலவரம்.
மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் காலை பங்குகளின் விலை சரிந்தன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் காலையில் வர்த்தகம் ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே 1,743 புள்ளிகள் சரிந்தன. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டியும் 525 புள்ளிகள் சரிந்தன. இதன் காரணமாக காலை 9.55 மணிமுதல் 10.55 வரை பங்குளின் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் உறுதியை தொடர்ந்து, காலை 11 மணியளவில் பங்குச் சந்தையில் மீண்டும் வர்த்தகம் தொடங்கிய பிறகு, நேற்றைய இறுதி நிலவரத்தைவிட ஒப்பிடுகையில் 1,013.96 புள்ளிகள் குறைவாக குறியீட்டு எண் 18,037.90 ஆக தொடங்கியது. (நேற்றைய இறுதி நிலவரம் 19051.86)
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் 1 மணி நேரம் தற்காலிக தடைக்கு பின் 11 மணியளவில் வர்த்தகம் தொடங்கப்பட்டது. அப்போது நிப்டி குறியீட்டு எண் 5,266.05 புள்ளிகளாக் இருந்தது. இது நேற்றைய நிலவரத்தை விட 402 புள்ளிகள் சரிவு (நேற்றைய கடைசி நிலவரம் 5668.05).
இன்று மாலையில் வர்த்தகம் முடிவதற்குள் மும்பை சென்செக்ஸ் 19,000 புள்ளி என்ற அளவை தொட்டுவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் நேற்றைய இறுதி அளவான 5668 புள்ளிகளுக்கு மீண்டும் உயர்ந்துவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.