வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தது.
நேற்று 1 டாலர் ரூ. 39.44/45 என்று இருந்தது. இன்று காலை டாலரின் மதிப்பு அதிகரித்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ 39.53 எனற அளவில் தொடங்கியது. பிறகு 1 டாலர் ரூ.39.49 முதல் ரூ.39.56 வரை பரிமாற்றம் நடந்தது.
கடந்த ஆறு மாதமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வந்தது. சென்ற வாரம் ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகளால், ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பித்தது.
அமெரிக்கா, இந்தியாவிற்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய அரசை ஆதரிக்கும் இடது சாரிகளுக்கும இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக மக்களவைக்கு முன்னதாகவே தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து அரசியல் கட்சிகளிடையே பரவலாக உள்ளது.
இந்த அரசியல் ஸ்திரத்தன்மையால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்பனை செய்து, டாலராக தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளனர். டாலரின் மதிப்பு உயர்வதற்கு இதுவே காரணம் என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் கூறுகின்றனர்.