பரஸ்பர நிதிகள் ( மியூச்சுவல் பண்ட் ) வெளியிடும் கடன் பத்திரங்கள், குறுகிய கால கடன் பத்திரங்கள் ஆகிய திட்டங்களில் மட்டுமே நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் முதலீடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் திரட்டும் வைப்பு நிதியில் குறிப்பிட்ட விழுக்காடு அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது.
அரசு கடன் பத்திரங்களில் செயயப்படும் முதலீட்டை விட, மற்ற திட்டங்களில் முதலீடு செய்தால் வருவாய் அதிகம் கிடைக்கும். இதற்காக ரிசர்வ் வங்கி முன்பு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை, யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியது.
இந்த விதி இப்பொழுது சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. இதன் படி யூ.டி.ஐ தவிர மற்ற நிறுவனங்களின் பரஸ்பர நிதிகளிலும் முதலீடு செய்யலாம் என்று கூறியுள்ளது.
ஆனால் முழுவதும் பங்குச் சந்தையில முதலீடு செய்ய நிதி திரட்டப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள், குறிப்பிட்ட விழுக்காடு பங்குச் சந்தையிலும், மீதம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது.
கடன் பத்திரங்கள், குறுகிய கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்களின் பரஸ்பர நிதியில் மட்டுமே நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் முதலீடு செய்ய என்று ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட வைப்பு நிதியை, கூட்டுறவு வங்கிகள் அதிக இடர்பாடு ( ரிஸ்க் ) உள்ள பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது பரஸ்பர நிதிகள் வெளியிடும் யூனிட் வாயிலாகவோ முதலீடு செய்யக் கூடாது என்பதற்காகவே, இந்த நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பொது மக்களிடமிருந்து திரட்டிய வைப்பு நிதியை கூட்டுறவு வங்கிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. பங்குகளின் விலை சரிந்ததால், இவை முதலீடு செய்த பங்குகளின் விலை குறைந்தது. இதனால் கூட்டுறவு வங்கிகள் திவாலானது.
இதில் வைப்புநிதி செலுத்தி இருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாகவே இந்த நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.