இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதற்கு, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது போன்ற காரணங்களினால், அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு ஏற்றுமதியாளர்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திருப்பூரில் இருந்து பின்னலாடைகளும், கரூர் பகுதியில் இருந்து மேஜை விரிப்புகள், தரை விரிப்புகள், திரைச் சீலைகள் போன்ற ஜவுளி ரகங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இவற்றை இறக்குமதி செய்யும் அமெரிக்க இறக்குமதியாளர்கள், பின்னலாடை, ஜவுளி ரகங்களை டாலர் விலையிலேயே நிர்ணயிக்கின்றனர். இங்குள்ள ஏற்றுமதியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் அடக்கவிலை, போக்குவரத்து செலவு, உள்நாட்டு வரிகள் போன்றவைகளை சேர்த்து, ஏற்றுமதி விலையை டாலர் கணக்கிலேயே நிர்ணயிக்கின்றனர்.
இங்குள்ள ஏற்றுமதியாளர்களும், அமெரிக்கா உட்பட மற்ற நாட்டு இறக்குமதியாளர்களும், இதன் அடிப்படையில் விலைகளை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். இந்த ஒப்பந்தங்கள் பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு முன்பே செய்து கொள்ளப்படும்.
டாலர் மதிப்பு சரிந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால், நீங்கள் கொடுக்கும் விலை கட்டுப்படியாகவில்லை, இதனால் ஏற்றுமதி செய்ய முடியாது. விலையை உயர்த்தி கொடுங்கள் என்று வெளிநாட்டு இறக்குமதியாளர்களிடம் கேட்க முடியாது. ஏனெனில் விலை, சரக்கின் தரம், சரக்கு அனுப்பும் மாதம் உட்பட அனைத்தும் எழுத்து பூர்வமாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.
அத்துடன் உரிய காலத்தில் சரக்கு அனுப்பவில்லை என்றால், செலுத்த வேண்டிய நஷ்டஈடு போன்ற நிபந்தனைகளும் ஒப்பந்தத்தில் இடம் பெற்று இருக்கும்.
இப்பொழுது திடீரென அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால், டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோருகின்றனர்.
இந்த பாதிப்பு குறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சிவ கண்ணன் கூறுகையில், நாங்கள் டாலரின் மதிப்பு ரூ.40 என்ற அளவுக்கும் குறையாது என்று கருதினோம். ஆனால் தொடர்ந்து டாலரின் மதிப்பு குறைந்து வருவது, கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
நாங்கள் வெளிநாட்டு இறக்குமதியாளர்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, அப்போது இருந்த டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை வைத்தே கணக்கிட்டு ஒப்பந்தம் செய்து கொள்கின்றோம். பெரும்பாலும் இறக்குமதியாளர்கள் சென்ற ஆண்டு விலையில் ஏற்றுமதி செய்யுமாறு வற்புறுத்துகின்றனர் என்று சங்கத் தலைவர் தெரிவித்தார்.
இதனால் தற்போது டாலரின் மதிப்பு சரிந்து வருவதால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்வது கட்டுப்படியாக கூடிய நிலையில் இல்லை என்று கூறினார். இதே போல் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களும் கூறுகின்றனர் என சங்கத் தலைவர் சிவ கண்ணன் கூறினார்.
இது பற்றி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ஏ. சக்திவேல் கூறுகையில், டாலரின் மதிப்பு சரிவால், நிச்சயமாக பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்படும். இந்த வருடம் பின்னலாடை ஏற்றுமதி ஐந்து சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஏற்றுமதி செய்யப்பட்டவைகள், அதிகளவு பாதிக்கப்படும். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் வெளிநாட்டு இறக்குமதியாளர்கள், இந்தியாவில் இருந்து வாங்குவதற்கு எதிர்காலத்தில் தயக்கம் காட்டுவார்கள் என்றார்.
அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால், பின்னலாடை, ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
இந்த நெருக்கடியில் இருந்து ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க, மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் சேவை வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி, தமிழக அரசை அணுக இருப்பதாகவும் தெரிகிறது.