தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் சன்னரக மிளகாய் அதிக அளவில் இருப்பில் உள்ளது. இதனால் அடுத்த பருவத்தில் கொள்முதல் விலை குறையலாம் என விவசாயிகளுக்கு, கோவை விவசாய பல்கலைக்கழக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.
கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கண்காணிப்பு மையம், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை நிலவரம், விலை ஏற்ற இறக்கம் ஆகியவை பற்றி ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், அடுத்த பருவத்தில் மிளகாய் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும், இதனை மிளகாய் பயிர் செய்யும் விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் சன்னரக மிளகாய் குளிர்பதன மையங்களில் அதிக அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்டோபரில் மிளகாய் விதைத்து, அடுத்த ஜனவரியில் அறுவடை செய்து, விற்பனை செய்யும் போது கிலோவுக்கு ரூ. 25 முதல் ரூ. 30 வரையே, வியாபாரிகள் கொள்முதல் செய்ய வாய்ப்பு இருக்கின்றது. விவசாயிகள் இதனை கவனத்தில் கொண்டு, மிளகாயா பயிரிடுவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.
சென்ற வருடம் மிளகாய் பயிரிடப்படும் பகுதிகளில் போதிய மழை பெய்தது. இதனால் அதிக பரப்பளவில் மிளகாய் விதைக்கப்பட்டு, உற்பத்தியும் அதிகளவு இருந்தது. பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி குறைந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மிளகாய் அதிகளவில் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள குளிர் பதன கிடங்குகளில் 20 கிலோ கொண்ட 45 முதல் 50 லட்சம் மூட்டைகள் இருப்பில் உள்ளன.
அதே போல் தமிழ்நாட்டிலும் குளிர் பதன கிடங்குகளில் 15 லட்சம் மூட்டைகள் இருப்பில் உள்ளன. இதை மிளகாய் பயிரிடப் போகும் விவசாயிகள் கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்படும் படி, கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.