Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியாறு அணை நீர்மட்டம் : உச்ச நீதி. தீர்ப்பிற்கு எதிராக கேரள அரசு சட்ட முன்வரைவு தாக்கல்!

பெரியாறு அணை நீர்மட்டம் : உச்ச நீதி. தீர்ப்பிற்கு எதிராக கேரள அரசு சட்ட முன்வரைவு தாக்கல்!

Webdunia

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு சட்ட முன்வரைவு ஒன்றை கேரள சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது!

தமிழ்நாட்டின் தென் மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவையை நிறைவேற்றவும், மின் உற்பத்திக்கு வழி காணவும், பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்பொழுதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் அது பெரியாறு அணையை பலவீனமாக்கும் என்று அடிப்படையற்றக் காரணத்தைக் கூறி அத்தீர்ப்பை முடக்கும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற கேரள அரசு முடிவு செய்தது.

அதன்படி, கேரள சட்டமன்றத்தில் இன்று கேரள பாசனம் மற்றும் நீர் காப்பு சட்டம் 2006 என்பதற்கான முன்வரைவை அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் திருவனஞ்சூர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதே நேரத்தில் தமிழ்நாட்டுடன் இணக்கமான உறவை தொடரவும் இச்சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படுவதாக கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி விளக்கம் கூறினார்.

இந்த சட்ட முன்வரைவு தமிழ்நாட்டின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கவோ அல்லது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிப்பதை தடுப்பதற்கோ அல்ல என்று உம்மன் சாண்டி கூறினார்.

113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்கினால், பலவீனமாக உள்ள அந்த அணை தாங்காது என்றும், அதனால் கேரளத்தின் 5 மாவட்டங்களுக்கு அபாயம் ஏற்படும் என்றும், எனவேதான் இந்த சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படுவதாக உம்மன் சாண்டி கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டமான 152 அடியில், 136 அடிக்கு அதிகமாக நீரைத் தேக்கினால்தான் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரை பெற முடியும். இதனை தடுப்பதற்காக அணை பலவீனமாக உள்ளது என்றும், 136 அடிக்கு மேல் தேக்கக்கூடாது என்றும் கேரள அரசு தொடர்ந்து பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது.

136 அடிக்கு மேல் தேங்கும் தண்ணீரை குழாய்களின் மூலம் கீழிறக்கி இடுக்கி நீர்தேக்கத்திற்கு கொண்டு சென்று அங்கு மின்சாரம் தயாரிக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக கட்டப்பட்ட பெரியாறு அணை பயனற்றதாகவே உள்ளது.

பெரியாறு அணை பலவீனமாகத்தான் உள்ளதா என்பதை கண்டறிய பல முறை மத்திய நீர்வள நிபுணர்கள் நேரடியாகச் சென்று சோதனையிட்டனர். அணை பலமாக உள்ளது என்றும், 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்குவதால் உடைந்துவிடும் அபாயம் ஏதுமில்லை என்றும் பலமுறை அறிக்கை தந்துள்ளனர்.

கடைசியாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க மத்திய நீர்வளத்துறை நியமனம் செய்த நிபுணர்கள் குழு பெரியாறு அணையை முழுமையாக சோதித்து அறிக்கை அளித்ததன் அடிப்படையிலேயே நீர்மட்டத்தை மேலும் 6 அடி, அதாவது 142 அடியாக உயர்த்துமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமின்றி, அணையின் முழு நீர்மட்டமான 152 அடி வரை நீரைத் தேக்க முடியுமா? அந்த அளவிற்கு அணை பலமுள்ளதாக உள்ளதா என்பதனை பொறியியல் நிபுணர்களை அனுப்பி உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் நோக்கத்துடன் கேரள அரசு இந்த அவசரச் சட்ட முன்வரைவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil