மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 பைசா அதிகரித்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ.47.48-47.50 என்ற அளவில் விற்பனையானது.
பிறகு ரூபாய் மதிப்பு மேலும் அதிகரித்து, 1 டாலரின் விலை ரூ.47.24 முதல் ரூ.47.25 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 40 பைசா அதிகம். (வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.47.64.).
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பால், பல நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் வட்டியை குறைத்துள்ளன. இதனால் அந்நாட்டு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதால் வருவாய் குறையும். இதனை கருத்தில் கொண்டு கடந்த வாரத்தில் இருந்து, முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க துவங்கியுள்ளன. இவை கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் முதல் நான்கு நாட்களில் மட்டும் 147.40 மில்லியன் டாலர் மதிப்பிற்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
இன்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கின. அத்துடன் வங்கிகளில் உள்ள டாலர் கணக்கு, இந்திய ரூபாய்கணக்காக மாற்றுவதும் அதிகரித்துள்ளது. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் டாலர் வரத்து அதிகமாக இருந்தது. இதுவே டாலர் மதிப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காரணம்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.47.32 பைசா. (வெள்ளிக் கிழமை ரூ.47.76)
1 யூரோ மதிப்பு ரூ.60.73 (ரூ.60.81)
100 யென் மதிப்பு ரூ.47.82 (ரூ.49.00)
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ. 74.20 (ரூ.74.87).