பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு களும் அதிகரித்தன.
இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.07 மணியளவில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. நிஃப்டி 76.50 (2.57% ), சென்செக்ஸ் 238.99 (2.40% ) புள்ளிகள் அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 248.02, எஸ் அண்ட் பி 500-26.11, நாஸ்டாக் 38.70 புள்ளிகள் அதிகரித்தது.
இதே போல் ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-92.55 புள்ளிகள் அதிகரித்தது.
சீனா விமான நிலையம், துறைமுகம், சாலை வசதி உட்பட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீட்டு வசதி உட்பட பல திட்டங்களை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக 600 பில்லியன் டாலர் செலவழிக்க உள்ளதாக கூறியுள்ளது.
சீனாவின் அறிவிப்பு தேக்கமடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சியை, ஊக்குவிக்கும் காரணியாக அமையும். சீனா இரும்பு, உருக்கு போன்றவைகளை இறக்குமதி செய்வது அதிகரிக்கும். இதனால் பல நாடுகளில் இருந்து சீனா அதிக அளவு பொருட்களை இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் இந்த அறிவிப்பு பண்டக சந்தைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இந்தியாவில் இருந்து, சீனா அதிக அளவு இரும்பு தாது, சோயா பிண்ணாக்கு போன்ற பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான “ஒபெக்” இதன் விலை சரிந்து வருவதால், உற்பத்தியை குறைப்பதாக முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் சவுதி அரேபியா டிசம்பர் மாதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஆசிய நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள தகவலில், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு பற்றி தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும்.
இதனால் அமெரிக்க சந்தையில் டிசம்பர் மாத கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2.96 டாலர் அதிகரித்து. இதன் விலை 64 டாலராக உயர்ந்தது. இதே போல் லண்டன் பிரின்ட் குரூட் விலையும் 1.85 டாலர் உயர்ந்து 59.20 டாலராக அதிகரித்தது.
காலை 10.35 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 82.30 (2.77% ) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 3055.30 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 263.72 (2.65% ) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 10,288.01 ஆக உயர்ந்தது.
இதே போல் மிட் கேப் 65.57, சுமால் கேப் 50.59, பி.எஸ்.இ. 500- 88.12 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று காலை ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், சிங்கப்பூர், தைவான் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்து இருந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 483.16, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 11.27, சீனாவின் சாங்காய் காம்போசிட் 87.06, ஜப்பானின் நிக்கி 428.10 புள்ளிகள் அதிகரித்தன.
ஆனால் சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 1.54 புள்ளிகள் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.45 மணியளவில் 1253 பங்குகளின் விலை அதிகரித்தும், 512 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 58 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை, ரூ. 19.27 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.147.08 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இன்று பங்குச் சந்தைகளில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கிய பிறகு, மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.