மும்பை பங்குச்சந்தை-சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 365 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. இதேபோல் தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடும் 109 புள்ளிகள் சரிந்தது.
நேற்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் 511 புள்ளிகள் சரிந்து 10,120 புள்ளிகளாக நிறைவடைந்த சென்செக்ஸ் குறியீடு, இன்று காலை துவக்கத்திலேயே சரிவைச் சந்தித்ததால், மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. காலை 10.10 மணி நிலவரப்படி 9,695 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்ததுள்ளது. இதேபோல் தேசியப் பங்குச்சந்தையும் 10.05 மணியளவில் 2,865 புள்ளிகள் வரை சரிந்ததுள்ளது.
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 8% சரிந்து முறையே ரூ.198, ரூ.167 ஆகவும், டி.எல்.எஃப். பங்குகள் 7% சரிந்து ரூ.247 ஆகவும், ஹிண்டல்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஜெய்பிரகாஷ் குழுமப் பங்கு 6.5% விலை சரிந்தும் காணப்பட்டன.
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 6%, சத்யம் நிறுவனம் 5.5%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹெச்.டி.எஃப்.சி. வங்கிப் பங்கு 5% விலை சரிந்துள்ளன.
ஆசியச் சந்தைகளிலும் சரிவு: அமெரிக்கா மற்றும் ஆசியப் பங்குச்சந்தைகளிலும் சரிவு நிலையே காணப்படுகிறது. சீனாவின் ஹாங்-செங் பங்குச்சந்தை குறியீடு 980 புள்ளிகள் சரிந்து 13,860 ஆகவும், ஜப்பானின் பங்குச்சந்தையான நிக்கி குறியீடு 541 புள்ளிகள் சரிந்து 8,980 ஆகவும், தைவான் பங்குச்சந்தை 288 புள்ளிகள் சரிந்து 4,691 ஆகவும், சியோல் காம்போஸிட் குறியீடு 83 புள்ளிகள் சரிந்து 1,099 ஆகவும் காணப்பட்டன.
குறைந்த கால லாப நோக்கில் வாங்கப்பட்ட பங்குகள் விற்கப்பட்டதன் காரணமாக நேற்றும் இன்றும் இந்தச் சரிவு தொடர்வதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.