மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 பைசா அதிகரித்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த உடன், பொதுத்துறை வங்கிகள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தன. அதே போல் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் கணிசமாக முதலீடு செய்தன. இதனால் டாலர் வரத்து அதிக அளவு இருந்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் நேற்று, கடந்த ஒரு மாதமாக இல்லாத அளவு டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. நேற்று மட்டும் டாலரின் மதிப்பு 91 பைசா அதிகரித்தது. இறுதியில் 1 டாலரின் மதிப்பு ரூ.47.73-47.74 என்ற அளவில் முடிந்தது.
இன்று காலை டாலரின் மதிப்பு 53 பைசா சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. பிறகு மேலும் ரூபாயின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு 75 பைசா சரிந்தது. 1 டாலர் ரூ.46.97 என்ற அளவில் விற்பனையானது.
பிறகு பங்குச் சந்தைகளில் நிலையில்லாத தன்மை நிலவியதால் 1 டாலர் ரூ.47.18 முதல் ரூ.47.45 என்ற அளவில் இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், கடந்த ஐந்து நாட்களில் 2,100 புள்ளி அதிகரித்து இருப்பது கவனிக்கத் தக்கது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.47.18 பைசா. (நேற்று ரூ.48.62).
1 யூரோ மதிப்பு ரூ.60.89 (ரூ.61.30)
100 யென் மதிப்பு ரூ.47.13 (ரூ.49.17)
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ. 75.05 (ரூ.76.71).