மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் முகாரத் என்று அழைக்கப்படும் புது வருடத்தின் முதல் தின வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
இன்று விக்ரம் சமாவத் 2065 வருடத்தின் முதல் நாள். இந்த புனித நாளில் மும்பை தங்கம் வெள்ளிச் சந்தையில், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95 அதிகரித்தது.
இதே போல் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 245 உயர்ந்தது.
சர்வதேச சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. இதன் விலை அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
இன்று தொழில் துறையினர் வெள்ளி வாங்குவதிலும், ஆபரணங்களை தயாரிப்பவர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், மொத்த வர்த்தகர்கள் இருப்பில் வைத்துள்ள தங்கம், வெள்ளியை விற்பனை செய்யவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய வர்த்தகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.235ம். 24 காரட் தங்கத்தின் விலை ரூ.245ம் அதிகரித்தது.
இன்று லட்சுமி பூஜை நாளாகும். இந்த புனித நாளில் தங்கத்தை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பாரம்பரியமாக நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பார்கள்.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் துணைத் தலைவர் ஹர்மேஷ் அரோரா கூறுகையில், முகாரத் வர்த்தக தினமான இன்று தங்கம், வெள்ளி விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்கின்றனர் என்று தெரிவித்தார்.
ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 732 முதல் 732.50 டாலராகவும், வெள்ளியின் விலை9.40 முதல் 9.41 டாலராக இருந்தது.
இவற்றின் விலை டாலருக்கு நிகரான யூரோ மதிப்பு குறைந்ததால் அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மும்பை தங்கம் வெள்ளி சந்தை நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை. மீண்டும் வழக்கம் போல் 31 ஆம் தேதி வர்த்தகம் தொடங்கும்.
இன்றைய விலை
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,160
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,100
பார் வெள்ளி கிலோ ரூ.17,370