பங்குச் சந்தைகளில் நண்பகல் 12.30 மணிக்கு பிறகு மாற்றம ஏற்பட்டது. இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிவை சந்தித்தன.
ஆனால் நண்பகலுக்கு பிறகு நிலைமை மாறியது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மதியம் 2 மணியளவில் 311.22 புள்ளி உயர்ந்தது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 74.25 புள்ளிகள் அதிகரித்தது.
இதே போல் மிட் கேப் 25.77, பி.எஸ்.இ. 500- 85.84 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் சுமால் கேப் 30.21 புள்ளி குறைந்து இருந்தது.
மதியம் 2 மணியளவில் மும்பை பங்குச் சந்தையில் 1006 பங்குகளின் விலை அதிகரித்தும், 1434 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 72 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
செபி தலைவர் சி.பி.பாவே (C B Bhave) மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு முன்னதாக பங்குச் சந்தையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தார்.
இந்த விதிகளில் மாற்றம் வரும் என்ற பரவலான கருத்து நிலவியது. இதற்கு இன்று பாவே முற்றுப் புள்ளி வைத்தார்.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. இதே போல் உலோக உற்பத்தி பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன. குறிப்பாக வங்கி 4.86%, ரியல் எஸ்டேட் 3.56%, தகவல் தொழில் நுட்பம் 3.24%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.25%,, மின் உற்பத்தி 1.91% உயர்ந்தது.