தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறீயிட்டு எண்களும் கடுமையாக சரிந்தன. இவை சிறிது சிறிதாக அதிகரித்தது.
பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது, சென்செக்ஸ் 271 புள்ளியும், நிஃப்டி 75 புள்ளியும் குறைந்தன.
அமெரிக்க அரசு அந்நாட்டில் பிணைய கடனால் நஷ்டமடைந்துள்ள நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அவசர நிதியாக 700 பில்லியன் டாலர் உதவி அளிக்க தீர்மானித்துள்ளது. இது எந்த அளவு நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்த முடிவால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தது.
ஆனால் இன்று மீண்டும் குறைந்தது. அதே நேரத்தில் பண்டக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 908 டாலராக நேற்று அதிகரித்தது. இறுதியில் 901.85 டாலராக நிலைபெற்றது. இதன் விலை 3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் மூலம் முதலீட்டு நிறுவனங்களின் கவனம் தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மீது திரும்பியுள்ளது.
அதே போல் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க சந்தையில் அக்டோபர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 130 டாலராக அதிகரித்தது. நவம்பர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை சுமார் 109 டாலராக உயர்ந்தது. அந்நியச் செலாவணி சந்தையில் இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றமே.
நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் டோவ்ஜோன்ஸ் 372.75, நாஸ்டாக் 94.92, எஸ் அண்ட் பி 500- 47.99 புள்ளிகள் குறைந்தன. இதே போல் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ-75.04 புள்ளி குறைந்தது.
இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான போக்கு நிலவியது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 526.41, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 50.72, சீனாவின் சாங்காய் 180 பிரிவு 130.38 புள்ளிகள் குறைந்தன. தைவான், தென்கொரியா தவிர எல்லா பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை இருந்தது.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 15.15 புள்ளி அதிகரித்தது. இன்று ஜப்பானில் விடுமுறை. ஆதலால் ஜப்பானிய பங்குச் சந்தைக்கும் விடுமுறை.
காலை 10.40 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 32.85 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4190.20 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 132.95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,862.01 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 42.44, சுமால் கேப் 51.71, பி.எஸ்.இ. 500- 42.44 புள்ளி குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணியளவில் 682 பங்குகளின் விலை அதிகரித்தும், 1241 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 72 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
வெள்ளிக் கிழமை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கணிசமான பங்குகளை வாங்கியுள்ளன. இதே போல் நேற்றும் வாங்கின.
நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 138.21 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 206.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இன்று பங்குச் சந்தை ஒரே நிலையாக இல்லாமல், அடிக்கடி மாற்றத்தைச் சந்திக்கும் என்று தெரிகிறது.