தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இன்றும் எல்லா பிரிவு குறீயிட்டு எண்களும் கடுமையாக சரிந்தன.
சென்செக்ஸ் 13 ஆயிரத்திற்கும், நிஃப்டி 4 ஆயிரத்திற்கும் குறைந்தது.
காலை 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 565.01 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 12,697.89 ஆக குறைந்தது.
இதே போல் நிஃப்டி 151.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3856.90 ஆக சரிந்தது.
இந்நிய பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றன. நேற்று மட்டும் 1,064.17 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. கடந்த மூன்று நாட்களில் மொத்தம் ரூ. 3,130.60 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இன்று பங்குச் சந்தை பாதிக்கப்பட்டாலும், பங்கு விலைகள் சிறிது அதிகரித்து வருகின்றன.
காலை 12.10 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 104.35 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3903.90 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 389.76 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 12,873.14 ஆக இருந்தது.
இதே போல் மற்ற பிரிவுகளிலும் முன்னேற்றம் தெரிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 197.69, பி.எஸ்.இ. 500- 160.57, சுமால் கேப் 281.05 புள்ளி குறைந்தது.
இன்றும் ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்திய நேரப்படி 12 மணியளவில் ஹாங்காங்கின் ஹாங்செங் 1,301.05, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 33.95, ஜப்பானின் நிக்கி 260.49, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 32.23 புள்ளிகள் குறைந்தன.
நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன.
அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்களான லெக்மான் பிரதர்ஸ் ஹோல்டிங், மெரில் லாஞ்ச் ஆகிய இரு நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தை சந்தித்தன. இதில் லெக்மான் நிறுவனம் திவாலா தாக்கீது கொடுத்தது. மெரில் லாஞ்ச் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட, இதை பேங்க் ஆப் அமெரிக்கா வாங்கியது.
அமெரிக்க இன்ஷ்யூரன்ஸ் குரூப் நிறுவனம் நஷ்டம் அடைவதை தடுக்க அமெரிக்க ரிசர்வ் வங்கி 85 பில்லியன் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்தியா உட்பட மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளையும் பாதித்துள்ளது. நிதிச் சந்தையில் பணப்புழக்கம் கடுமையாக பாதித்துள்ளது. எந்த நாட்டு ரிசர்வ் வங்கியும், மற்ற நாட்டு வங்கிகளுக்கு நிதி உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் அமெரிக்கா, ஆசியா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ததை திரும்ப பெறுகின்றனர். இவர்கள் மற்ற நாட்டு கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.