ரூபாயின் பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம், அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று கடும் சரிவு ஏற்பட்டது.
இன்று காலை ஒரு மணி நேர வர்த்தகத்தில் 500 புள்ளிகளுக்கும் அதிகமாகக் குறைந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடான் சென்செக்ஸ், இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் 620 புள்ளிகள் குறைந்து 13,802.22 புள்ளிகளாகக் முடிந்தது. ஒரு கட்டத்தில் 13,760 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்தது.
இது கடந்த 14 மாதங்களில் காணாத மிக்க் குறைந்த அளவாகும்.
தேசப் பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி, இன்றைய வர்த்தகத்தில் 179.20 புள்ளிகள் குறைந்து 4,136.65 புள்ளிகளில் முடிந்தது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு விலை 21 மாதங்களில் காணாத அளவிற்கு இன்று குறைந்தது. மற்றொரு தனியார் வங்கியான எச்.டி.எஃப.சி.யின் பங்கு 8.15 விழுக்காடு விலை குறைந்தது.
ரிலையன்ஸ் இன்ஃபிரா விலை 7.72 விழுக்காடும், இன்போசிஸ் 4.17 விழுக்காடும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.56 விழுக்காடும், விப்ரோ பங்குகள் 7.78 விழுக்காடும் குறைந்தன.