மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகளவு சரிந்தன.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தையும், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் நேற்று மாலை அதிகரித்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி, கையிருப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்பது பங்குச் சந்தை வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டதே.
காங்கிரஸ் கட்சிக்கும், இடது சாரி கட்சிகளுக்கும் இடையே இன்று அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இந்த பிரச்சனையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் பங்குச் சந்தையை பாதித்து வந்தது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் தன்மையை பொறுத்தே, பங்குச் சந்தை நடவடிக்கை இருக்கும்.
பெட்ரோலிய நிறுவனம், உலோக உற்பத்தி பங்குகள் அதிக அளவு பாதிக்கப்படவில்லை. ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம், வங்கி பிரிவு அதிக அளவு குறைந்தது. ஆனால் அதிக அளவு குறியீட்டு எண்கள் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் நடக்கும் போது முதன்முதலாக சென்செக்ஸ் 14 ஆயிரத்திற்கும் கீழ் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. (இதற்கு முன் சென்ற வருடம் ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்செக்ஸ் 14 ஆயிரத்திற்கும் குறைந்தது).
காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 230 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,876.64 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 52 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4139.30 ஆக சரிந்தது.
இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன. ஆனால் நேற்று ஐரோப்பிய அமெரிக்க பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.15 மணி நிலவரப்படி 372 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1262 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 36 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 164.89 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,941.69 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 27.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4163.30 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 68.71 சுமால் கேப் 64.62 பி.எஸ்.இ. 500- 57.80 புள்ளி குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,367.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,277.29 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.90.06 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,055.86 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.579.92 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.475.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 10,724.48 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.57,219.33 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-32.50 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 34.93, நாஸ்டாக் 17.46, எஸ் அண்ட் பி 500-3.71 புள்ளி சரிந்தது.
இன்று காலையில் 10.10 மணியளவில், ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சீனா, சிங்கப்பூர் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 2.35, ஜப்பானின் நிக்கி 103.06 புள்ளி குறைந்தது.
சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 10.62, சீனாவின் சாங்காய் காம்போசிட் 79.62 புள்ளி அதிகரித்தது.