மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சரிந்தது. ரியல் எஸ்டேட், வங்கி பிரிவு பங்கு விலைகள் அதிக அளவு குறைந்தன.
காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 90 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,976.67 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 37 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,464.35 ஆக இருந்தது.
இந்திய பங்குச் சந்தை நேற்று கடுமையான பாதிப்பை சந்தித்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளின் விலை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது.
இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 15 ஆயிரத்திற்கும் குறைந்தது.
இந்தியா எழுச்சி பெறும் பொருளாதார நாடு என்ற கருத்து தகர்ந்து வருகிறது. உலக முதலீட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற எழுச்சி பெறும் பொருளாதாரத்தில் இருந்து, முதலீடுகளை திரும்ப பெறுகின்றன.
இவை ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் எழுச்சியுறும் பொருளாதார நாடுகளில் மட்டுமே முதலீடு செய்ய விரும்புகின்றன. இதற்கு காரணம் பண்டக சந்தையில் உணவுப் பொருட்கள் முதல் பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமே பயன் பெறும் என்பது தான் என்று எமர்ஜிங் மார்க்கெட் போர்ட்போலியோ பண்ட் ரிசர்ச் என்ற எழுச்சி பெறும் பொருளாதார நாடுகளை பற்றி ஆய்வு செய்து வரும் நிறுவனம் கணித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் ரீதியான பாதிப்பு, விலைவாசி உயர்வால் மக்களின் வாங்கும் சக்தி குறையும். இதனால் தொழில், வர்த்தக வளர்ச்சி பாதிக்கப்படும். இவை நிறுவனங்களின் வருவாயும், இலாபமும் குறையும். அத்துடன் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். இது போன்ற காரணங்களினால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறும் போக்கே அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மனதில் அச்சம் நிலவுகிறது.
நேற்று இருந்ததது போலவே, இன்றும் காலையில் பங்குகளை விற்கும் போக்கு அதிக அளவு காணப்பட்டது. இதனால் தொடர்ந்து எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் சரிந்து வருகின்றன. நிஃப்டி 4,300 என்ற அளவிற்கு குறையும். அதற்கு பிறகு தான் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் வங்கி பங்குகள் விலை குறைந்து வருகிறது. அத்துடன் ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்ப பிரிவு பங்குகளும் பாதிக்கப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.55 மணி நிலவரப்படி 962 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,094 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 61 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 174.49 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,890.61 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 58 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4442.95 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 22.08, சுமால் கேப் 12.30, பி.எஸ்.இ. 500- 50.73 புள்ளி குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,546.86 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,891.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.1,344.67 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,842.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.811.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.1,030.26 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.51,750.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று ஜெர்மனி, பிரான்ஸ் தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தை குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-29.20 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 70.51, எஸ் அண்ட் பி 500- 1.08, புள்ளி அதிகரித்தது. ஆனால் நாஸ்டாக் 15.10 புள்ளி குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 172.01, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 29.54, ஹாங்காங்கின் ஹாங்செங் 838.87, சீனாவின் சாங்காய் காம்போசிட் 188.87 புள்ளி குறைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் நேற்றும் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன.