பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருந்து பங்கு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மதியம் 1 மணியளவில் சென்செக்ஸ் 16 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. சென்செக்ஸ் 760.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,049.99 ஆக உயர்ந்தது.
இதே போல் மிட் கேப் 271, சுமால் கேப் 263.18, பி.எஸ்.இ.500-294.74 புள்ளிகள் அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்து உள்ளன.
தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி உட்பட எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் உயர்ந்தன.
மதியம் 1 மணி நிலவரப்படி நிஃப்டி 244.80 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4609.85 ஆக அதிகரித்தது.
மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 5 முதல் 7 விழுக்காடு வரை அதிகரித்தன. மதியம் 1 மணி நிலவரப்படி 1921 பங்குகளின் விலைகள் அதிகரித்தன. 702 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 37 பங்குகளின் விலையில் மாற்றமில்லை.
காலை நிலவரம்!
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 429 புள்ளியும், நிஃப்டி 125.90 புள்ளியும் அதிகரித்து இருந்தன.
நேற்று பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகளவு ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.
ஆனால் இறுதியில் சென்செக்ஸ் 295 புள்ளிகள் அதிகரித்தது. இன்று காலையில் இருந்தே இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.
அமெரிக்கா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் அதிகரித்து குறியீட்டு எண்கள் உயர்ந்தன. இந்த சாதகமான சூழ்நிலையால் இந்திய பங்குச் சந்தையும் அதிகரித்தது. இன்று முழுவதும் இதே நிலை தொடர வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக நிஃப்டி பிரிவில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், பி.ஹெச்.இ.எல், இன்போசியஸ், ஸ்டேட் வங்கி பங்குகளின் விலை அதிக அளவு உயர்ந்தது. இதனால் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
காலை 10.35 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 485.33 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,774.73 ஆக அதிகரித்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 138.05 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4747.90 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 146.20, சுமால் கேப் 119.42, பி.எஸ்.இ.500-176.77 புள்ளிகள் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 3 முதல் 4 விழுக்காடு வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் 1513 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 769 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 50 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்றைய இறுதி நிலவரப்படி டோவ் ஜோன்ஸ் 187.32, நாஸ்டாக் 68.64, எஸ் அண்ட் பி 20.37 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 24.06, ஜப்பானின் நிக்கி 295.09, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 70.67, ஹாங்காங்கின் ஹாங்செங் 954.89 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 113.31 புள்ளிகள் குறைந்து இருந்தது.