மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் 15 நிமிடங்களில் பங்குச் சந்தை சரிவை சந்தித்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 175 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் நிஃப்டி 56.25 புள்ளிகள் அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் பவர் போனஸ் பங்குகளை அறிவித்ததால், இதன் குழும நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்ததே. இதனால் சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் அதற்கு பிறகு குறைந்தன.
இன்று பங்குச் சந்தைகளில் அதிக மாற்றத்துடனும், குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.
காலை 11.15 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 73.31 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,275.80 ஆக குறைந்தது.
மிட் கேப் 82.87,சுமால் கேப் 124.48,பி.எஸ்.இ, 500-48.19 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 19.90 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5090.80 ஆக குறைந்தது. தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 0.81 முதல் 2.19 விழுக்காடு வரை குறைந்தன.
ஆனால் அமெரிக்கா உட்பட ஆசிய நாட்டு சந்தைகளில் பங்குக விலைகள் அதிகரித்து, குறியீட்டு எண் உயர்ந்து இருந்தது. இதனால் இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகள் விலை அதிகரித்து குறியீட்டு எண் அதிகரிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
அதே நேரத்தில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் அரசின் திட்டங்கள், பொருளாதார கொள்கைகள் குடியரசுத் தலைவரின் உரையில் இடம் பெறும்.
இதன் முக்கிய அம்சங்களை பொறுத்து பங்குச் சந்தைகளின் போக்கு இருக்கும்.
அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 96.72, நாஸ்டாக் 3.57,எஸ் அண்ட் பி 500- 10,58 புள்ளிகள் உயர்ந்து இருந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்செங் 44.43, ஜப்பானில் நிக்கி 410.15,சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 26.12 புள்ளிகள் அதிகரித்து இருந்தன. சீனாவின் சாங்காய் காம்போசிடி 325 புள்ளிகள் குறைந்து இருந்தது.
இன்று இந்திய பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் ஒரே நிலையாக இல்லாமல் மாற்றங்களை சந்திக்கும்.