பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 219.06 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,515.62 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி 8.40 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,183.40 ஆக குறைந்தது.
காலையில் இருந்தே அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் தொடர்ந்து எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.
அமெரிக்கா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால், இங்கும் பங்கு விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 286.17 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,448.51 ஆக குறைந்தது.
மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
மிட் கேப் 52.16,சுமால் கேப் 57.51பி.எஸ்.இ. 500-88.76 புள்ளிகள் குறைந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 64 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5127.70 ஆக சரிந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 142.96, நாஸ்டாக் 27.32, எஸ் அண்ட் பி 17.50 புள்ளிகள் குறைந்தன. அமெரிக்காவில் உற்பத்தி துறையின் வளர்ச்சி குறைந்ததாக புள்ளி விபரங்கள் வெளியாயின. இதனால் தான் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 446.39 புள்ளிகள் குறைந்தன. இதே போல் ஹாங்காங்கின் ஹாங்செங் 434.75, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 36.72, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 19.45 புள்ளிகள் சரிந்தன.
சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலராக அதிகரித்தது. இதனால் பணவீக்கம் அதிகரித்து வளர்ச்சியை பாதிக்கும். இதனால் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படுவதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.