பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. தகவல் தொழில் நுட்பம் தவிர மற்ற எல்லா பிரிவு பங்கு விலைகளும் குறைந்தது.
மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதால், இந்திய பங்குச் சந்தையிலும் பாதிப்பு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 194 புள்ளிகள் சரிந்தது. இதன் குறியீட்டு எண் 18 ஆயிரத்திற்கும் குறைந்து 17.881.75 ஆக சரிந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி 66.75 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,214.05 ஆக குறைந்தது.
காலையில் இருந்து சரிய தொடங்கிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து இழப்பையே சந்தித்தன.
காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 389.70 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,686.96 ஆக இருந்தது.
இதற்கு முன் சென்செக்ஸ் சரிந்தாலும், மற்ற பிரிவு பங்குகள் பாதிப்பு இல்லாமல் இருந்தது.
ஆனால் இன்று மி்ட் கேப் 92.52,சுமால் கேப் 116.46,பி.எஸ்.இ 500-143.49 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 125.80 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5155.80 ஆக இருந்தது.
தகவல் தொழில் நுட்பம் தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் 1.44 முதல் 2.74 விழுக்காடு வரை குறைந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன்ஸ் 10.99, நாஸ்டாக் 15.60, எஸ் அண்ட் பி 1.21 புள்ளிகள் குறைந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிந்தன.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 200.90, ஹாங்காங்கின் ஹாங்செங் 390.09, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 74.63, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 32.61 புள்ளிகள் சரிந்து இருந்தது.
பாங்க் ஆப் இந்தியா, கோடக் மகேந்திரா வங்கி, இன்டூஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி ஆகிய வங்கிகள் அனுமதிக்கப்பட்ட 40 விழுக்காடு பங்குகளுக்கு மேல், பங்குச் சந்தையில் விற்பனை செய்வதற்கு ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரின. இதை ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது. இது பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கருதுகின்றனர்.